அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதமாக்க வலியுறுத்தி, பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளை முற்பகல் 11.30 மணிக்கு யாழ். பேருந்து நிலையம் முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அனுரதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த 14 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 

இதேவேளை அவர்களின் கோரிக்கை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையினால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவ உதவிகளையும் தற்போது நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில் கைதிகளது போராட்டத்தின் நியாயத்தை  வெளிப்படுத்தும் முகமாகவும் கைதிகளின் போராட்டத்திற்கு பலம் சேர்த்து அவர்களது விடுதலையை விரைவாக்க வலியுறுத்தியுமே மேற்கண்ட போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். 

அத்துடன் இப் போரட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.