வாகன விபத்தொன்றில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். எனினும் அவருடைய பாதுகாலர்கள் இருவர்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இராஜகிரிய பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவின் நெருக்கமான உறவினரின் மரண வீட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நேற்றுமுன்தினம் இரவு ராஜகிரிய பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

அஞ்சலியை செலுத்திவிட்டு வாகனத்தில் ஏறுவதற்காக வீதிக்கு வந்துள்ளார்.

இதன்போது பிரதமரின் வாகனத்தை நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்துள்ளது. அருகில் இருந்த அதிகாரிகள் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்திய போதும், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பிரதமரை நோக்கி நேராக சென்றுள்ளார்.

உடனே சுதாகரித்து கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கியதை அடுத்து மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு அதிகாரிகளின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய 20 வயதுடைய ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த மோட்டார் சைக்களின் சாரதியை பொலிஸார் கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவர் சாரதி அனுதிப்பத்திரம் இல்லாது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.