ஆசிய கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டிக்காக இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று மாலை 5.00 மணிக்கு ஆடுகளம் புகுந்து பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்று வரும் 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரில் ஐ.சி.சி.யின் முழு அங்கத்துவ நாடுகளான ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா, சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான், அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை, மெஸ்ரபி மொட்ராஸா தலைமையிலான பங்களாதேஷ், அஸ்கார் ஆப்கான் தலைமையிலான ஆப்பாகிஸ்தானும் மற்றும்  ஆசியக் கிண்ணத்திற்கான தெரிவுப் போட்டிகளில் வெற்றிபெற்ற அங்கத்துவ நாடான அனுஸ்மன் ராத் தல‍ைமையிலான ஹொங்கொங் அணியுமாக மொத்தம் 6 அணிகள் கலந்துகொண்டன. 

இத் தொடரில் லீக் சுற்றில் இலங்கை மற்றும் ஹொங்கோங் அணிகளும், "சுப்பர் 4" சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் வெளியேறியுள்ள நிலையில் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஒன்றையொன்று எதிர்த்து பலப் பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.

இந்தியா, பங்களாதேஷ் அணிகளை பொறுத்தவரையில் கிரிக்கெட் உலகில் இவர்களின் சமர் நீடித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற 13 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் போது இவ்விரு அணிகளே இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

இருபதுக்கு 20 போட்டியாக இடம்பெற்ற இத் தொடரின் இறுதிப் போட்டியானது மழை காரணமாக 15 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதலாவதாக களமிறங்கிய பங்களாதேஷ் அணி 15 ஓவர்களில் 120 ஓட்டங்களை பெற்றது. 121 என்ற வெற்றியிலக்கை நோக்க களமிறங்கிய இந்திய அணி 13.5 ஆவது பந்தில் நிர்ணயித்த இலக்கை கடந்து வெற்றி வாகைசூடியது.

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற சுதந்திரக் கிண்ணத் தொடரிலும் பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் இறுதிப் போட்டியில் நுழைந்து பலப்பரீட்சை நடத்தின.

இருபதுக்கு 20 போட்டியாக இடம்பெற்ற இப் போட்டியில் பங்களாதேஷ் அணி முதலில் களமிறங்கி 20 ஓவர்கள் நிறைவில் 166 ஓட்டங்களை பெற்றது. 167 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிங்கிய இந்திய அணி, தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான ஆட்டத்தினால் இறுதி ஓவரில் எதிர்பாராத விதமாக வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

இந் நிலையில் இவ்விரு அணிகளும் மீண்டும் ஒன்றையொன்று எதிர்த்து ஆடுகளத்தில் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இந்திய அணியை பொறுத்தவரையில் ஆரம்ப வீரர்களான அணித் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இதுவரை களமிறங்கி ஆடிய இத் தொடரின் போட்டிகளை பொறுத்தவரையில் நல்லதொரு ஆரம்பத்தையே இந்திய அணிக்காக பெற்று கொடுத்துள்ளனர். 

எனினும் மத்திய வரிசை துடுப்பாட்டம்தான் இந்தியாவுக்கு கேள்விக்குறியை ஏற்படுத்தும் எனினும் தினேஷ் கார்த்திக், தோனி, மனிஷ் பாண்டே சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், பும்ரா, கேதர் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரும் இதுவரை தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

இன்று களமிறங்கவுள்ள 11 பேர் கொண்ட ரோஹித சர்மா தல‍ைமையிலான இந்திய அணி சார்பில் தவான், ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, கேதர் யாதவ், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், சஹால் மற்றும் பும்ரா ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

பங்களாதேஷ் அணியை பொறுத்தவரையில் தமிம் இக்பால் மற்றும் ஷக்கிப் அல் ஹசன் ஆகிய இருவரும் உபாதைக்குள்ளாகி, போட்டியிலிருந்து விலகியமை பங்களாதேஷ் அணிக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. 

எனினும் தொடரில் இதுவரை அசத்தலாக ஆடிவரும் முஷ்பிக்குர் ரஹிம் இருப்பது பங்களாதேஷ் அணிக்கு ஒரு தூணாகவே உள்ளது. அத்துடன் மாமதுல்லா, லிட்டான் தாஸ், சவுமிய சர்க்கார், மொமின் உல்ஹாக் ஆகியோர் துடுப்பாட்டத்தில் அசத்தக்கூடியவர்கள்.

அதேநேரம் பந்து வீச்சிலும் அணித் தலைவர் மோர்ட்டாஸா, ரஹ்மான், ருபெல் ஹுசேன் மற்றும் மிராஸ் ஆகியோர் இந்தியாவுக்கு சவால் விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோர்ட்டாஸா தலைமையிலான 11 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியில் லிட்டன் தாஸ், சவுமிய சர்க்கார், மெமின் உல்ஹக், முஷ்பிக்குர் ரஹிம், மொஹமட் மிதுன், இம்ருல் கைஸ், மாமதுல்லா, மெய்டி ஹசான், ருபெல் ஹுசேன் மற்றும் ரஹ்மான் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

எவ்வாறெனினும் 7 ஆவது தடவையாக ஆசிய சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொள்ளும் எண்ணத்துடன் இந்தியாவும், 13 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இழப்பு, மற்றும் சுதந்திரக் கிண்ணத் தொடரின் இழப்பு என்பவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் முதலாவது ஆசிய கிண்ணத்தை ரூஷிப்பதற்கான மோகத்துடன் பங்களாதேஷ் அணியும் ஒன்றை ஒன்று எதிர்த்தாடவுள்ளது.