மரணமடைந்த அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி  தேரரின் நீண்டகால துறவி வாழ்க்கையில் பௌத்த தர்மத்திற்கும், முழு உலக மானிட சமூகத்திற்கும் உயர்ந்த சேவைகள்  செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனா தெரிவித்தார்.

காலமான சியம் நிகாயாவின் அஸ்கிரிய மகாவிகாரை பிரிவின் மகாநாயக்கரான ராஜகீய பண்டித அதி கலகம தம்மசிந்தி ஸ்ரீ தம்மானந்த அத்ததஸ்ஸி  மகாநாயக்க தேரரின் புனித தேகத்திற்கு இறுதி அஞ்சலிக்காக ஜனாதிபதி இன்று சமூகமளித்த போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில், நாம் எவரும் எதிர் பார்த்திராத நிலையில் அவரின் மரணம் நிகழ்ந்துள்ளது.

இதன் காரணமாக முழு உலக பௌத்தர்கள் மட்டுமல்லாது ஏனைய சமயத்தவர்களும் இது தொடர்பாக ஆழ்ந்த கவலை அடைந்துள்ளனர்.

ஒழுக்கத்திற்கும் தர்மத்திற்கும் சிரேஷ்ட மதகுருவான அவர் மறைந்தமை நாட்டிற்கு அளவிட முடியாத பாரிய இழப்பாகும். மக்களுக்கு மிக அண்மித்து இணக்கமாக, சுமூகமாக, நட்பு ரீதியாக அவர் எப்போதும் செயற்பட்டார்.

அத்துடன் மகாநாயக்க தேரரின் சமய வாழ்க்கை மற்றவர்களுக்கு முன் உதாரணமாகும் என்றும் தெரிவித்தார்.