ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டின் இராணுவ வீரர்களுக்கு சம்பளத்திற்கு பதிலாக அந்நாட்டு பெண்களை வல்லுறவு செய்ய அரசாங்கமே அனுமதி அளித்ததாக ஐ.நா சபை குற்றம் சாட்டியுள்ளது.

தெற்கு சூடான் நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு போர் நடந்தது.

ஆளும் கட்சி தனக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு எதிராகவும் தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவும், இராணுவத்தை கொண்டு கடுமையாக தண்டனை கொடுத்ததாகவும் ,பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும், முறைப்பாடு செய்த ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணைகளை நடத்தி அறிக்கை வெளியிட்ட போது அதில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகின.

அரசுக்கு எதிராக செயல்படும் குடிமக்களை இராணுவம் துப்பாக்கியால் சுட்டும்,விஷவாயு அறையில், மரங்களில் கட்டி தொங்கவிட்டும் அடைத்தும் கொடூரமாக கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர செயலின் உச்சம் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நிகழ்ந்துள்ளது.

அரசுக்கு எதிராக செயல்படும் குடிமக்களை அடக்கவும்,அழிக்கவும் இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டனர். இராணுவ வீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு பதிலாக பெண்களை வல்லுறவுக்குட்படுத்தலாம் என அரசாங்கமே அனுமதி அளித்ததாக ஐ.நா சபை குற்றம் சாட்டியுள்ளது.

தெற்கு சூடானில் உள்ள 10 மாகாணங்களில் யுனைட்டி ஸ்டேட் என்ற மாகாணத்தில் மட்டும் 1,300 பெண்கள் இராணுவ வீரர்களால் வல்லுறவுக்கு ஆளாகியுள்ளனர் என ஐ.நா சபை புள்ளி விபரம் வெளியிட்டுள்ளது.