தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்ட கடைசி இராணுவ சிப்பாய் முதல் இராணுவ தளபதி வரையான அனைவரும் சிரேஷ்ட வீரர்கள் என்றும் அவர்களின் அபிமானத்தை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு வழங்க வேண்டிய அதிகபட்ச வரப்பிரசாதங்களை குறைவின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரில் அமெரிக்க வாழ் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்விமான்கள், புத்திஜீவிகள், தொழில்வாண்மையாளர்கள், வியாபாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், ஜனாதிபதி உற்சாக வரவேற்பளித்தனர்.

யுத்தம் நிலவிய காலகட்டத்திலும் அதற்கு பின்னரும் யுத்தத்துடன் எவ்வித சம்பந்தமும் அற்ற பல சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவற்றை இராணுவத்தினரின் மீது மேற்கொள்ளப்படும் வேட்டையாக கருதமுடியாது என தெரிவித்த ஜனாதிபதி, 2015ஆம் ஆண்டில் தன்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்கள் தன்மீது கொண்டிருந்த நம்பிக்கைகளில் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதும் முக்கியமானதாக அமைந்திருந்தது எனவும் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு அப்பாற்பட்ட மேற்குறிப்பிட்ட சம்பவங்களுக்கு குற்றவாளிகளாக நிரூபணமாகும் சந்தர்ப்பத்தில் அக்குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதானது உண்மையான இராணுவ வீரர்களுக்கு செலுத்தும் மரியாதை என்று தெரிவித்த ஜனாதிபதி சர்வதேச ரீதியில் எமது இராணுவத்தினர் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள மேற்குறிப்பிட்ட தவறுகளை சரிசெய்து கொள்வது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

இன்று நாட்டில் சுதந்திரமும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட்டுள்ளதுடன், கடந்த மூன்றரை வருடங்களில் எந்தவொரு பத்திரிகை ஆசிரியரும் ஊடகவியலாளரும் தாக்குதல்களுக்கு உள்ளாகி நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்ணுக்கு புலப்படும், புலப்படாத பல வெற்றிகளை கடந்த மூன்றரை ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இழந்த சர்வதேச ஒத்துழைப்புகளை மீண்டும் தாயகம் பெற்றுக்கொண்டது பாரிய வெற்றியாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக மேற்கொண்டுள்ள அமெரிக்க சுற்றுப்பயணமானது தயாகத்தின் இராணுவத்தினரின் கௌரவத்தை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணமாகும் என்றும் தெரிவித்தார்.

இன்று உலகில் காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுடன் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதனால் பல பிரச்சினைகளை தோன்றியபோதும் மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் வழங்கிவருவதுடன், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தாயகத்தின் பெருமையை பாதுகாப்பதுடன், மக்களுக்கான நாட்டின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமெரிக்க வாழ் இலங்கையர்கள் பாராட்டு தெரிவித்தனர்.