(நா.தனூஜா)

நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதற்கு ஊடக சுதந்திரம் இன்றியமையாததாகும். ஊடக சுதந்திரத்தினைப் பயன்படுத்தி ஊடகங்கள் சுயாதீனமாக சரியான செய்திகளை வெளியிடுவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஊடகங்களால் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்ட நபர் நான் என்பதை அறிவேன். எம்முடைய அரசாங்கம் புதிய வீட்டுத்திட்டம், மாணவர் புலமை பரிசில் திட்டம், வீதி அபிவிருத்தி, சுகாதார விருத்தி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள போதிலும் எதிர்மறையான விடயங்களை மாத்திரமே ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சிறந்த செயற்திட்டங்களை வெளிகாட்டாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். 

ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்புணர்வும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் 20 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள மாநாடு இன்று வியாழக்கிழமை சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமாகியது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்புணர்வும் பற்றிய கொழும்பு பிரகடனத்திற்காக பல ஊடகவியளாலர்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டனர். பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. பல உயிர்கள் பறி போனது. அவ்வாறு போராடி பெற்ற கொழும்பு பிரகடனம் 20 வருடங்களை அடைந்துள்ளது. 

ஊடக சுதந்திரத்திற்காக போராடிய லசந்த விக்ரமதுங்க , பிரகீத் எக்னலிகொட, கீத் நொயார் மற்றும் உதயன் பத்திரிகையின் சில ஊடகவியலாளர்கள் இன்று இல்லை. முன்பை விட இப்போது ஊடக சுதந்திரம் உயர் நிலையில் உள்ளது. ஊடக சுதந்திரத்தின் ஓர் அங்கமாகவே எமது அரசாங்கத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த அரசாங்கத்தினைப் போலன்றி இந்த அரசாங்கத்தில் ஊடகவியலாளர்களால் சுயாதீனமாக செயற்பட முடிகின்றது. 

எனினும் இன்றளவில் ஊடகங்கள் உண்மையான செய்திகளை வெளியிடுகின்றனவா என சிந்திக்க வேண்டியுள்ளது. நாட்டில் ஜனநாயகம் உறுதியாக நிலைநாட்டப்பட வேண்டும் எனில் அங்கு ஊடக சுதந்திரம் உருவாக வேண்டும். 

உண்மையான செய்திகள் மக்களைச் சென்று சேரும் போது ஜனநாயகம் வலுவடையும். ஆனால் தற்போது ஊடகங்கள் அரசாங்கம் மேற்கொண்டுள்ள சிறந்த செயற்திட்டங்களை வெளிக்கொணர்வதில்லை. எதிர்மறையான விடடயங்களை மாத்திரமே மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன. இரு வகையான செய்திகளையும் மக்களிடம் சேர்ப்பதே ஊடக சுதந்திரம் ஆகும். 

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலிகொட, கீத் நொயார் தொடர்பில் பேசியவர்களும் விசாரணைகளை ஆரம்பித்தவர்களும் யார் என சிந்தித்து பார்க்க வேண்டும். 

ஊடகவியளார்கள் மீதான வன்முறை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள எமது அரசாங்கமே நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் ஊடகங்களால் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்ட நபராக நான் இருக்கின்றேன். அதற்கான சுதந்திரம் ஊடகங்களிடம் உண்டு. ஊடகவியலாளர்கள் போராடி பெற்ற சுதந்திரத்தை அவர்களால் மாத்திரமே இல்லாமல் செய்ய இயலும். எனவே ஊடக சுதந்திரத்தின் ஊடாக சரியான செய்திகளை வழங்கி சுயாதீனமான முறையில் ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்றார்.