பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்புக்களின் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பாக போதுமான புரிந்துணர்வையும் அக்கறையும் கொண்டிருகக்கின்றார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது என அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த சபாநயாகர் கருஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற குழவில் பங்கேற்றவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் போது குறிப்பிட்டார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி: நீண்டகாலமாக வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ளாதிருந்த நீங்கள் கடந்தவாரம் இலங்கை பாராளுமன்றக் குழுவில் ஒருவராக இந்தியாவுக்குச் சென்றிருந்தீர்கள் அந்தப் பயணம் எவ்வாறு அமைந்தது?

பதில்: இந்தப் பயணத்தின்போது எமது மாற்று அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும் எமது மக்களின் சமகால பிரதான பிரச்சனைகள் மற்றும் தேவைகளை எடுத்துரைக்காவும் இந்தப் பயணம் வாப்பாக அமையும் என்று நம்பினேன் எதிர்பார்த்ததைப் போல் இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்று நினைக்கின்றேன். இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வெளிநாட்டு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றம் பல முக்கியஸ்தர்களை உத்தியோகபூர்வமாகவும் தனியாகவும் சந்திக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தன. அந்தச் சந்திப்புக்களில் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக பல விடயங்களை தெளிவுபடுத்தியதுடன் போர்ச் சூழலற்ற தற்போதைய இலங்கையின் அரசியல் சூழல் தொடர்பாகவும் பல விடயங்களை தெளிவுபடுத்தக் கிடைத்தது. அவர்களும் அதைப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். அந்தவகையில் இந்தியா அரசானது முழு இலங்கையின் அரசியல் சூழல் தொடர்பாகவும் அதில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பாகவும் போதுமான புரிந்துணர்வைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. துரதிஷ்டவசமாக இலங்கை தமிழ்த் தலைமைகள் பூகோள மற்றும் பிராந்திய போக்குகளையும் மாற்றங்களையும் புரிந்து கொண்டு நிரந்தரமானதும் சமத்துவமானதுமான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதிலும் அதில் இந்தியாவின் அக்கறையை பெற்றுக்கொள்வதிலும் அர்ப்பணிப்போடு நடந்து கொள்ளவில்லை என்பதையும் புரிந்து கொள்ளமுடிந்தது.

கேள்வி: இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடனான சந்திப்பில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் இந்தியப் பிரதமரின் அக்கறை எவ்வாறு இருந்தது? அதன் மீதான உங்களின் நம்பிக்கை எவ்வாறு இருக்கின்றது?

பதில்: நரேந்திரமோடியுடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களடங்கிய பல கட்சிகளின் தலைவர்கள் என்றவகையில் ஏற்படுத்தப்போவதாகக் கூறப்படும் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக எடுத்துக்கூறப்பட்டது. என்னைப்பொறுத்தவரை புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுமாக இருந்தால் அதை வரவேற்கத் தயாராக இருக்கின்றேன். ஆனால் புதிய அரசியலமைப்பு வருமா? என்பது நிச்சயமற்றதாகவே இருக்கின்றது என்பதை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். எனவே புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படுவதற்கு எத்தனை காலம் எடுக்கும் என்பது தெரியாத நிலையில் ஏற்கனவே அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகக் கிடைக்கப்பெற்ற 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பித்து இறுதித் தீர்வை நோக்கி முன்னேறுவதே நடைமுறைச்சாத்தியமானது என்பதையும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டிய அவசியமில்லை என்பதையும் எடுத்துரைத்தேன். அரசியல் தீர்வுக்கான அபிலாஷைகளை சுமந்து வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களின் நாளாந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் அபிவிருத்தியின் அவசியம்ரூபவ் சுய பொருளாதாரத்தில் வாழ்வதற்கான தொழிற்துறைகளின் தேவை என்பவற்றையும் எடுத்துரைத்தேன். குறிப்பாக காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைத்தல்ரூபவ் பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் புனரமைப்புச் செய்யவேண்டும் என்பதாகும். எமது கோரிக்கைகளை மிகவும் அக்கறையோடு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதையும்ரூபவ் அமைச்சர்கள் கிரகித்துக்கொண்டதையும் அவதானித்தேன். ஒரு சம்பிரதாய சந்திப்பாக இல்லாமல், இந்திய அரசின் அக்கறையும் அதில் வெளிப்பட்டது. தீர்வுக்காக வாய்க்கப்பெற்ற பல நல்ல வாய்ப்புக்களை தமிழ்த் தலைமைகள் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் தவறவிட்டுள்ளன. வாய்ப்புக்கிடைத்த தமிழ்த் தலைமைகள் எவையும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைக்காண வேண்டும் என்ற உறுதியோடும் அதன் மீதான நம்பிக்கையோடும் அணுகவில்லை. நம்பிக்கையீனத்தோடும் அவற்றை அணுகியதும் அந்த வாய்ப்புகளை சாதகமாக்கிக்கொள்ள உண்மையாக உழைக்க எந்தத் தமிழ்த் தலைமையும் முன்வராததுமே தமிழ் மக்களின் இத்தனை பின்னடைவுகளுக்கும் இழப்புக்களுக்கும் காரணமாகும். எனவே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இந்திய அமைச்சர்களுடனான சந்திப்புக்கள் அதன் மீது அவர்கள் வெளிப்படுத்திய அக்கறையின் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். எனது கோரிக்கைகள் பலாபலன்களாக எமது மக்களுக்கு வந்துசெரும் என்று நம்புகின்றேன்.

கேள்வி: இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாராளுமன்றக்குழு இந்தியாவில் தங்கியிருக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இந்திய அரசு அழைத்திருந்தது. இதன் ஊடாக இந்திய வெளிப்படுத்தும் செய்தி என்னவாக இருக்கும்?

பதில்: நாங்கள் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணமாக முன்னரே சென்றிருந்தோம் மஹிந்த ராஜபக்ஷ சுப்ரமணியசுவாமியின் அழைப்பை ஏற்று அங்கு வருகை தந்திருந்தார். அவரும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரையும் சந்தித்திருக்கின்றார். தற்போதைய இலங்கைச் சூழலில் ஆட்சிமாற்றம் ஒன்றுக்காக வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டவர்களாக தமது அதிருப்தியை வெளிப்படுத்திவருவதும் நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்காரணமாக ஆட்சியாளர்கள் மீதான அதிருப்திகள் காரணமாகவும் தென்னிலங்கையில் மாறிவரும் அரசியல் சூழலில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினரின் தேர்தல் வெற்றிகள் தொடர்பாகவும் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள அவதானிப்புக்கள் காரணமாகவும் மஹிந்த ராஜபக்ஷவுடனான இந்திய தரப்புகளின் சந்திப்புகள் அமைந்திருக்கலாம். ஆனால் எங்களது குழுவின் பயணத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்திற்கும் தொடர்புபட்ட காரணங்கள் எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை.

கேள்வி: இந்தியாவுக்குச் சென்றிருந்த பாராளுமன்றக் குழுவில் உள்ளடங்கியிருந்த ஏனைய கட்சித் தலைவர்கள் வேளையோடு நாடு திரும்பியிருந்த நிலையில் நீங்கள் சற்றுதாமதமாகவே நாடு திரும்பியிருக்கின்றீர்கள் ஏதும் விசேடமான காரணங்கள் உள்ளனவா?

பதில்: ஏற்கனவே நான் கூறியதைப்போன்று உத்தியோகபூர்வ சந்திப்புக்களைத் தாண்டியும் பல தனியான சந்திப்புக்கள் எனக்கு இருந்தன. அதற்காக உத்தியோகபூர்வமான சந்திப்புக்களை முடித்துக்கொண்டு நான் நாடு திரும்பாமல் சில நாட்கள் டெல்லியில் தங்கிவிட்டேன் பின்னர் தமிழ் நாட்டுக்கும் சென்றிருந்தேன். அங்கும் பல பேருடன் சந்திப்புக்களை செய்திருந்தேன். அந்தச் சந்திப்புக்கள் தொடர்பாக இப்போது பேசுவது உசிதமாக இருக்காது. இந்திய அரசோடு மட்டுமல்லாமல் இலங்கை அரசானது தமிழ் நாட்டின் அரசுடனும் நெருக்கமான உறவுகளைப் பேணவேண்டும். என்று நான் ஏற்கனவே வலியுறுத்தி வந்திருக்கின்றேன். அந்தவகையில் சில அரசியல் மற்றும் ஊடக முக்கியஸ்தர்களையும் இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளவர்கள் சிலரையும் தனிப்பட்ட ரீதியில் சந்தித்து கலந்துரையாடினேன். தமிழ் நாட்டுக்கும்ரூபவ் வடமாகாணத்திற்குமிடையே வர்த்தக உறவுகளை எதிர்காலத்தில் பலப்படுத்துவது தொடர்பாகவும் எனது சந்திப்புக்களில் பலருடன் எனது கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றேன். அவர்களும் அதற்கு தயாராக இருக்கின்றார்கள். மக்கள் எனக்கு போதுமான அரசியல் அதிகாரத்தை வழங்குவார்களாக இருந்தால் வடமாகாணசபையைப் பொறுப்பேற்று முதல் ஆறு மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் வடமாகாணத்தை வளமான மாகாணமாக மாற்றுவேன் என்பதையும் தமிழ் மக்களின் பொருளாதார எழுச்சிக்கும் பலமான அத்திவாரத்தை ஏற்படுத்தி பணிகளை முன்னெடுப்பேன் என்ற எனது நடைமுறைச்சாத்தியமான அரசியல் பயணத்தின் நோக்கத்தையும் என்னைச் சந்தித்தவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளேன்.

கேள்வி: நீங்கள் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு இந்திய அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியிருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அதனை மையப்படுத்திய ஏதேனும் சந்திப்புக்கள் நடைபெற்றதா?

பதில்: வடமாகாணசபையை பொறுப்பேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்கினேஸ்வரனும் அதை சரியாகச் செய்யவில்லை என்ற அதிருப்தியும் மாகாணசபை முறைமையை செயற்திறனுள்ள ஒருவர் பொறுப்பேற்று வெற்றிகரமாக முன்னகர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இந்திய முக்கியஸ்தர்களிடம் இருக்கின்றன. உணர்ச்சியூட்டும் வெறும் அரசியல் கருவியாக மாகாணசபை அதிகாரத்தை வீணடிப்பதை அங்கே எவரும் விரும்பவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்கள் விலையைக் கொடுத்திருப்பதைப்போன்று இந்திய அரசும் ஒரு விலையைக்கொடுத்துள்ளது. ஆகவே இலங்கை இந்திய ஒப்பந்தத்துடனோ தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துடனோ எவ்விதமான பங்களிப்பையும் செய்யாதவர்களுக்கும் அதை வேடிக்கை பார்த்து தமது குடும்பங்களை பாதுகாப்பாக வெளிநாடுகளில் குடியமர்த்திவிட்டு அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்களுக்கும் மாகாணசபை அதிகார அலகின் அவசியமோ அதை எவ்வாறு முன்னகர்த்திச் செல்லவேண்டும் என்ற அக்கறையோ இருக்கப்போவில்லை. உள்நாட்டில் எம்மீதான கறைகள் அகன்றுவரும் நிலையில் எம்மைப் பற்றிய தவறான புரிதல்களும் தெளிவடைந்துவருகின்றன. எமக்கு அதிகாரங்கள் கிடைத்த சந்தர்ப்பங்களை நாங்கள் உச்சபட்சமாக மக்களின் நலனில் நின்று சேவை செய்திருக்கின்றோம் என்றவகையில் எம்மீது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்தியாவின் அந்த சமிக்ஞையை பக்கபலமாக வைத்துக்கொண்டு மாகாணசபையை நாம் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வோம்.

கேள்வி: சூளைமேட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உங்களை குற்றவாளியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் இந்திய விஜயமும் செய்திருக்கின்றீர்கள். அந்த விசாரணைகளின் நிலைமைகள் என்னவாகவுள்ளன?

பதில்: பல தடவைகள் நான் தெளிவுபடுத்தியுள்ளேன் சூளைமேட்டில் நடந்த சம்பவத்திற்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் அந்த சம்பவத்தில் தொடர்புபட்டிருந்தவர்கள் பி.ஆர்.எல்.எப் தோழர்கள். அப்போது எனக்கும் .பி.ஆர்.எல்.எப் இயக்கத்திற்குமிடையே சில பிரச்சனைகள் இருந்ததால் அந்தப் பிரச்சினைகளுக்கு சுமூகமாகத் தீர்வைக் காண்பதற்கு முயற்சித்துக்கொண்டு இருந்தேன். சூளைமேட்டில் அந்தச் சம்பவம் நடைபெற்றதாக எனக்கு செய்தி கிடைத்ததும் அங்கு இருந்த தோழர்களை பாதுகாக்கவும் அந்தப் பிரச்சினையை தீர்க்கவும் அந்த இடத்திற்கு உடனடியாக சென்றிருந்தேன். நான் அங்கு சென்ற நேரத்தில் அங்கு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவரை முச்சக்கர வண்டியில் மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தார்கள். இந்த உண்மையைத்தான் பொலிஸாரின் பதிவும் வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே நான் தேடப்படும் நபரும் அல்ல. நீதிமன்றத்தின் முன்னால் குற்றவாளியும் அல்ல. என்மீது கொலைக் குற்றம் சுமத்தியவர்களும்ரூபவ் தேடப்படும் குற்றவாளி என்று அவதூறு சுமத்தியவர்களும் எனது அரசியல் எதிராளிகளின் கைக்கூலிகளே அன்றி வேறு யாருமல்ல. நான் அந்தச் சம்பவம் தொடர்பில் காணொளி ஊடாக எனது சாட்சியத்தை வழங்குவதற்கு முன்வந்ததானது பி.ஆர்.எல்.எப் இயக்கத்தை இரத்தமும் சதையுமாக வளர்த்தவன் என்ற உணர்வும் எனது தோழர்களுக்காக நான் முன்னிற்க வேண்டும் என்ற தோழமையுடனான தார்மீகப் பொறுப்புமேயாகும். அதைத்தான் நான் செய்தேன்.

அதற்காகத்தான் கொலைக் குற்றவாளி என்றும் தேடப்படும் குற்றவாளி என்றும் அவப்பெயரைச் சுமந்திருந்தேன். அந்த அவப்பெயரைத் துடைப்பதற்காகவும் இந்தியப் பயணத்தை பயன்படுத்திக்கொண்டேன். எனது நோக்கம் நிறைவேறியிருக்கின்றது. நான் டெல்லிக்கும் தமிழ் நாட்டிற்கும் சென்று எனது காரியங்களை முடித்துக்கொண்டு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாமல் நாடு திரும்பியிருக்கின்றேன்.

ஒருவேளை இவர்கள் கூறுவதைப்போன்று நான் தேடப்படும் குற்றவாளியாகவோ கொலைக் குற்றவாளியாகவோ இருந்திருந்தால் இந்தப் பயணம் சாத்தியப்பட்டிருக்காது. அல்லது இந்தியாவில் எனக்கு சட்டப்பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். அவ்வாறு எதுவும் இருக்கவில்லை. எனவே என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர்களுக்கு தகுந்த பதில் கிடைத்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

(நேர்கணல் ஆர்.ராம்)