14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் தீர்மானம் மிக்க போட்டியில் முஸ்தாபிர் ரஹ்மான் வீழ்த்திய 4 விக்கெட்டுக்களின் துணையுடன் பாகிஸ்தான் அணியை 202 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி, 37 ஓட்டங்களினால் வெற்றயீட்டிய பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. 

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி 48.5 ஆவது ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 239 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ்  அணி சார்பில் ரஹிம் 99 ஓட்டத்தையும், மொஹமட் மிதுன் 60 ஓட்டத்தையும் மாமதுல்லா 25 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

240 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வந்த பாகிஸ்தான் அணி 18 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

அதன்படி பகர் ஜமான் மற்றும் பாபார் அசாம் தலா ஒரு ஓட்டத்துடனும் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் 10 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதன் பின்னர் இமாம் உல்ஹக்குடன் மலிக் ஜோடி சேர்ந்தாடி வர பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 37 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் மலிக் 14 ஓட்டத்துடனும், இமாம் 8 ஓட்டத்துடனும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வர 13.2 ஆவது ஓவரில் அணி 50 ஓட்டங்களை கடந்தது.

இவர்கள் இருவரும் இணைந்து அணிக்காக சிறந்ததொரு இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தபோதிலும் 20.1 ஆவது ஓவரில் மலிக் 30 ஓட்டத்துடனும் ருபெல் ஹுசேனின் பந்தினை அடித்தாடினார். எனினும் மோர்டாஸாவின் அற்புதமான பிடியெடுப்பு காரணாக ஆட்டமிழந்து களம்விட்டு நீங்கினார்.

இவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து களமிறங்கிய ஷெடப் கானும் 4 ஓட்டத்துடன் சவுமிய சர்க்காரின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 25.1 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 94 ஓட்டங்களை பெற்றது.

அதன் பின் இமாமுடன் ஜோடி சேர்ந்து அஷிப் அலி துடுப்பெடுத்தாடி வர வீழ்ச்சியிலிருந்து பாகிஸ்தான் மீண்டெழுந்தது. எனினும் 39.2 ஆவது ஓவரில் அணி 165 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை அஷிப் அலி 31 ஓட்டத்துடன் மெய்டி ஹசானுடைய பந்து வீச்சில் ஆட்டமிழக்க, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இமாம் உல்ஹாக்கும் 83 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 40.5 ஆவது ஓவரில் 167 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. தொடர்ந்தும் அடுத்தடுத்த ஆட்டமிழப்பு காரணமாக பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 37 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தாபிர் ரஹ்மான் 4 விக்கெட்டுக்களையும், மெய்டி ஹசான் 2 விக்கெட்டுக்களையும், ருபெல் ஹுசேன், மாமதுல்லா மற்றும் சவுமிய சர்க்கார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி எதிர்வரும் 28 ஆம் திகதி துபாயில் இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.