இலங்கை ஒரு காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை என்று சொன்னாலே பயந்து கொண்டிருந்த காலம் மாறி இன்று அங்கே சென்று துணிச்சலாக எங்களுடைய கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கு காரணம் நல்லாட்சி அரசாங்கம் படிப்படியாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தொழில் நுட்ப பீடத்தின் கட்டிடம், வகுப்பறை, பெண் ஆசிரியர்களுக்கான விடுதி ஆகியவற்றின் திறப்பு விழா இன்று பாடசாலை அதிபர் ரி..தனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினரும் , குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வலய கல்வி பணிப்பாளர் திருமதி. செலின் சுகந்தி செபஸ்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்

தொடர்ந்து அங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,

கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை என்று சொன்னாலே அந்த பக்கம் திரும்பி பார்க்கவே நாங்கள் சிந்திப்பது வழக்கம்.

ஆனால் இன்று அவ்வாறு இல்லை . அந்த ஐக்கிய நாடுகள் சபைக்கு நேரடியாக விஜயம் செய்து எங்களுடைய கருத்துக்களை தெளிவாக அவர்களுக்கு எடுத்து கூறுகின்ற அளவிற்கு இந்த நாட்டில் படிப்படியாக மனித உரிமைகளையும் ஐக்கிய நாட்டின் சாசனத்தையும் நடை முறைப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கின்றோம். 

இது இந்த நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருத முடியும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகின்ற பொழுது எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்திருக்கின்றார்.

எங்களுடைய உள்நாட்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எங்களுக்கு சந்தர்ப்பத்தை தாருங்கள் என்பதை உறுதியாக தெரிவித்திருக்கின்றார்.

அதே நேரத்தில் எங்களுடைய நாட்டில் தற்பொழுது நடை முறைபடுத்தப்படுகின்ற அனைத்து விடயங்களிலும் சர்வதேசம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாக இருந்தால் நிச்சயமாக நாங்கள் எங்களுடைய இலக்கை விரைவாக அடைய முடியும்.

நாங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சர்வதிகார போக்குடன் நடந்து கொள்வதற்க தயாராக இல்லை. சர்வதேசத்தின் ஆதரவு இன்றி இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாங்கள் அவர்களுடன் இணைந்து பயனித்தால் மாத்திரமே இந்த நாட்டை வளமான ஒரு நாடாக மாற்ற முடியும்.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்கும் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அதற்காக தமிழ் கட்சிகளும் முஸ்லிம் பிரதிநிதிகளும் இணைந்து செயற்படுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் எங்களுடைய நாட்டை சர்வதேச ரீதியாக முன்கொண்டு செல்வதில் எங்களுடைய ஜனாதிபதியும் பிரதமரும் முன் நின்று செயற்படுகின்றமையானது மிகவும் வரவேற்க கூடிய ஒரு விடயமாகும். அதற்கு நாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.