இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள், இருபதுக்கு 20, டெஸ்ட் தொடர்களுக்கான இலங்கை அணியினை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அஞ்சலோ மெத்தியூஸ் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, இலங்கை அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு இருபதுக்கு 20 போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதன்படி இவ்விரு அணிகளுக்குமிடையேயான இப் போட்டித் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந் நிலையில் இத் ‍தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணிக்குழாமை, இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதில் தினேஷ் சந்திமல் தலமையிலான இலங்கை அணியில், உபுல்தரங்க, சமரவிக்ரம, நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய டிசில்வா, தசூன் சானக்க, திஸர பெரேரா, அகில தனஞ்சய, துஷ்மந்த சமீர, லசித் மலிங்க, அமில அப்போன்ஷோ, லக்ஷான் சந்தகன், நுவான் பிரதீப், கசூன் ராஜித மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸின் பெயர் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணிக் குழாமில் இடம்பெறவில்லை. எனினும் அவர் டெஸ்ட் தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அத்துடன் இத் தொடரில் செஹான் மதுசங்க, குசல் மெண்டீஸ், திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மல் மற்றும் ஜெப்ரீ வெண்டர்ஸி ஆகியோரின் பெயர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

இதேவ‍ேளை இலங்கை தெரிவுக்குழுவினரால் தெரிவு செய்யப்பட்ட இந்த குழாமுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அனுமதி வழங்கியுள்ளது.

இந் நிலையில் தினேஷ் சந்திமால் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டித் தொடர் வரை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கு தலைவராகவிருந்து இலங்கை அணியை வழிநடத்துவார் என தெரிவுக்குழுவின் தலைவர் கிரஹம் லெப்ரோய் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.