(இராஜதுரை ஹஷான்)

கத்தோலிக்க மதத்தினையும், நாட்டின் மத  ஒருமைப்பாட்டினையும் சீர்குலைக்கும் வகையிலே  நிதியமைச்சர் மங்கள சமரவீர கத்தோலிக்க திருச்சபையின் தலைவரின் கருத்தினை    விமர்சித்துள்ளார். 

இவ்விடயத்திற்கு நிதியமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சரின் கருத்து தொடர்பில் இதுரை அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சரும் எவ்விதமான  கண்டனங்களையும்  குறிப்பிடவில்லை. ஆகவே நிதியமைச்சரின் கருத்து அரசாங்கத்தின் கருத்தோ என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மனித உரிமைகள் தொடர்பில் குறிப்பிட்ட கருத்தினை நிதியமைச்சர் மங்கள சமரவீர  தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார். 

இது குறித்து கத்தோலிக்க சபையின் முக்கியஸ்தர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்கள். 

இந்த சந்திப்பு இன்று விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்றதுடன் இதன் பின்னர் ஊடக சந்திப்பினை நடத்தி விளக்கமளிக்கப்பட்டது.  இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.