14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் ஆறாவதும் இறுதியுமான போட்டி பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் துபாயில் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது. 

நடந்து முடிந்த  'சுப்பர் 4' சுற்றின் ஐந்து போட்டிகளிலும் புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி முதலிடத்திலும் (05 புள்ளிகள்), பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும் (02 புள்ளிகள்), பங்களாதேஷ் அணி மூன்றாமிடத்திலம் (02 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் அணி நான்காவது இடத்திலும் (01 புள்ளி) உள்ளது.

இத் தொடரில் இந்திய அணியைப் பொறுத்தவரையில் இதுவரை தோல்வியை காணாத பலம்பொருந்திய அணியாக உள்ளது. அதன்படி தான் எதிர்கொண்ட  மூன்று 'சுப்பர் 4' போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றியையும், ஒரு போட்டியை சமநிலையிலும் முடித்துள்ளது. இதனால் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு இலகுவாக நுழைந்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை இத் தொடரில் பொறுத்தவரையில் இதுவரை தலா நான்கு போட்டிகளை எதிர்கொண்டுள்ளன. இதில் 2 போட்டிகளில் வெற்றியையும் 2 போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளன.

ஆகவே இவ்விரு அணிகளுக்குமிடையில் இன்று இடம்பெறவுள்ள இப் போட்டியானது வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற போட்டியாக மாத்திரம் அமையாமல், அரையிறுதிக்கு நுழையப் போகும் அடுத்த அணி எது என்பதை தீர்மானிக்கின்ற போட்டியாக அமைந்துள்ளது.

ஆகவே இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் 28 ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் பலப்பரீட்சை நடத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரையில் லீக் தொடரில் தான் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளில் வெற்றியையும், மேலும் சுப்பர் 4 சுற்றின் மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியையும் ஒரு போட்டியை சமநிலையிலும் முடித்துள்ளது. 

இதனால் ஆப்கானிஸ்தான் அணி புள்ளிகளின் அடிப்படையில் நான்காவது இடத்தை பிடித்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.