இந்தியா – கர்நாடக மாநிலம் கோகாக் பகுதியில்  500 ரூபா கடனுக்காக நண்பரின் மனைவியை கடத்தி சென்று திருமணம் செய்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.மேற் குறிப்பிட்ட பகுதியில் வசித்து வந்த பசவராஜ் கொன்னாவர் என்ற நபரும் அவரது மனைவி பார்வதியும் வசித்து வந்தனர்.

பசவராஜின் நண்பர் ரமேஷ் ஷாகாபூரில் உள்ள விடுதி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். குறித்த விடுதியிலேயே பசவராஜின் மனைவியும் வேலை செய்து வந்துள்ளார். 

இந் நிலையில் ரமேஷிடம் பார்வதி 500 ரூபா கடனாக பெற்றுள்ளார். கடன் வாங்கி 2 மாதங்களாகியும் கடனை பார்வதி திருப்பி கொடுக்கவில்லை.

இதனிடையே ரமேஷ் பார்வதியின் மனதை மாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். அத்தோடு பசவராஜூடன் பார்வதியை பேச விடாமலும் தடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பசவராஜ் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு அளித்துள்ளார்.

பசவராஜ் அளித்த முறைப்பாட்டில் 

தனது மனைவியை நண்பர் 500 ரூபா கடனுக்காக கடத்திச் சென்றுவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

விசித்திரமாகவும் சிறு பிள்ளைத்தனமான புகார் என பொலிஸார் நடவடிக்கை எடுக்காததனால் பசவராஜ் பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த விடயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யவதாக உறுதியளித்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டமைக்கமைய பசவராஜ் போராட்டத்தினை கைவிட்டுள்ளார்.