(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலைபேசியில் கலந்துரையாடியதாக கூறப்படும் விடயம் தொடர்பில், சி.ஐ.டி.முன்னெடுக்கும் விசாரணைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியரின் வாக்கு மூலத்தில் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோரை கொலை  செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குறித்த இந்தியர் சி.ஐ.டி.க்கு தெரிவித்ததாகவும், எனினும் அவர் அது தொடர்பில் மேலதிக விடயங்களை வெளிப்படுத்தாத நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாகவும் சி.ஐ.டி.யின்  உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொக்கு ஹெட்டி மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க ஆகியோர் கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு நேற்று அறிவித்தனர்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும்  விதமாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலைபேசியில் கலந்துரையாடியதாக கூறப்படும் விடயம் தொடர்பில், குறித்த கலந்துரையாடல் பதிவு செய்யப்பட்ட தொலைபேசியை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு  உட்படுத்தியுள்ள நிலையில், அதில் உள்ள குரல்களை உறுதி செய்ய இன்று முறைப்பாட்டாளர் நாமல் குமாரவை குரல் சோதனைக்கு உட்படுத்தவும் சி.ஐ.டி.  நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டது.

அதன்படி இன்று காலை 10.00 மணிக்கு குரல் சோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் ஆஜராக முறைப்பாட்டாளர் நாமல் குமாரவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.  குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்து அப்பிரிவின் அதிகாரிகளுடன் அரச இரசாயன பகுப்பாய்வாளர் முன் ஆஜராகுமாரு நாமல் குமாரவுக்கு இதன்போது நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றப் புலனயவுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் குரித்த விசாரணை அறையின் உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொக்குஹெட்டிகே மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க ஆகியோர் நேற்று கோட்டை நீதிவனிடம்  முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சி.ஐ.டியின் உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக சில்வா, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க மற்றும்  உப பொலிஸ் பரிசோதகர் கே.எம்.எம்.குமாரசிங்க ஆகியோர் நேற்று இடையீட்டு மனுவூடாக கோட்டை நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்து இந்த அனுமதியைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன, இந்த விவகாரத்தில்  முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் சி.ஐ.டி.யிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு சி.ஐ.டி. உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்கவும்  பதிலளித்தனர்.

 அவர்களது பதிலில்  , '  இந்த விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் இந்தியர் ஒருவரை நாம் கைது செய்துள்ளோம். முறைப்பாட்டாளரின் வீட்டுக்கு  அவரைத் தேடிச் சென்று சந்தேகத்துக்கு உரிய முறையில் நடந்துகொண்டமையால் அதனை மையப்படுத்தி அவரை கடந்த வாரம் கைது செய்தோம். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கின்றோம். இதற்கான அனுமதியை பாதுகாப்பு செயலாளர் ஊடாக பெற்றுள்ளோம். இந்த இந்தியர் கடந்த  பெப்ரவரி மாதமே இலங்கைக்கு வந்துள்ளார். அவர் தற்போது இங்கு தங்கியிருக்க சட்ட ரீதியிலான அனுமதி பெற்ற வீசா அவரிடம் இல்லை. அவர் இங்கு வந்து ராகம பகுதியில் 2500 ரூபா மாத வாடகைக்கு அறையெடுத்து தங்கியிருந்துள்ளார்.

 அவரால் சிங்கள மொழி ஓரளவு பேச முடிகின்றது. எனினும் ஆங்லத்தில் சரளமாக பேசுகிறார். அவரிடம் நாம் வாக்கு மூலம் பெற்றோம். அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றார். எனினும் அது குறித்த மேலதிக தகவல்களை அவர் வெளிப்படுத்தவில்லை. இதனைவிட அந்த சதி குறித்து அவர் எந்த உத்தியோகபூர்வ இடங்களுக்கோ நபர்களுக்கோ முறைப்பாடுகளையோ தகவல் அளிப்புக்களையோ செய்யவில்லை. இவ்வாறான பின்னணியில்  மேலதிக விசாரணைகளை நாம் பயங்கரவாத தடை சட்ட விதிவிதானங்களின் பிரகாரம் முன்னெடுத்து வருகின்றோம்' என்றனர்.

இதனையடுத்து இது குறித்து விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிவான் லங்கா  ஜயரத்ன, அதுவரை அது குறித்த வழக்கை நிலுவையில் வைக்க உத்தரவிட்டார்.