இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான 14 ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4 சுற்றின் ' ஐந்தாவது போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதற்கிணங்க ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 252 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ஷஹ்சாத் 124 ஓட்டத்தையும், மொஹமட் நபி 64 ஓட்டத்தையும் பெற்றுக் கொண்டனர்.

253 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ராகுல் மற்றும் ராயுடு ஆகியோர் களமிறங்கினர்.

இவர்கள் இருவரும் இணைந்து நல்லதொரு இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை விக்கெட் இழப்பின்றி வேகமாக அதிகரித்தது. 

ஆப்கானிஸ்தான் அணிப் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நான்கு திசையில் அடித்தாட 15.2 ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ தொட்டது. அதன்பின்னர் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வந்த ராயுடு 43 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 8 ஆவது அரை சதம் விளாக, மறுமுனையில் ராகுல் 55 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது இரண்டாவது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

இவர்கள் இருவருமாக இணைந்து 110 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது இந்திய அணி 17.1 ஓவரில் தனது முதல் விக்கெட்டினை இழந்தது. அதன்படி ராயுடு 57 ஓட்டத்துடன் நபியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து செல்ல ராகுலும் 20.3 ஆவது ஓவரில் 60 ஓட்டங்களுடன் ரஷித் கானின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து களறிங்கிய தோனியும், தினேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்து ஆடி வர அணியின் ஓட்ட எண்ணிக்கை 142 ஆக இருக்கும் போது தோனி 8 ஓட்டத்துடன் ஜாவேத் அஹ்மடியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்.யூ. முறையில் ஆட்டமிழக்க மணீஷ் பாண்டே களமிறங்கினார். 

எனினும் மணீஷ் பாண்டே 8 ஓட்டத்துடன் அத்தாப் ஆலமின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து தினேஷ் கார்த்திக்குடன், கேதர் யாதவ் ஜோடி சேர்ந்தாடிவர இந்திய அணி 36.2 ஆவது ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது.

இதன் பின்னர் கேதர் யாதவ் 19 ஓட்டத்துடனும், தினேஷ் கார்த்திக் 44 ஓட்டத்துடனும், தீபக் சஹார் 12 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 44.5 ஓவரில் 226 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டினை இழந்து தடுமாறத் தொடங்கியது. 

இந் நிலையில் ஜடேஜாவும் குல்தீப் யாதவும் ஜோடி சேர்ந்தாட வெற்றி வாய்ப்பு இந்தியா பக்கம் திரும்பியது. எனினும் குல்தீப் யாதவ் மற்றும் சித்தார் கவூல் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க ஆட்டம் சூடுபிடித்தது.

இதனால் இந்திய அணிக்கு ஒரு விக்கெட் மாத்திரம் கைவசமிருக்க 6 பந்துகளுக்கு 7 ஓட்டங்கள் என்ற நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து 2 பந்துகளுக்கு 1 ஓட்டம் என்ற நிலை வந்தபோது ரஷித் கானின் பந்தை ஜடேஜா உயர்த்தி அடிக்க நஜிபுல்லா அதனை பிடியெடுத்து ஜடேஜாவை ஆட்டமிழக்க செய்தார்.

ஆகையால் இந்திய அணி 50 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து, ஆப்கானிஸ்தான் அணி பெற்றுக் கொண்ட 252 ஓட்டத்தையே பெற்றது. இதனால் இப் போட்டி வெற்றிதோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் சார்பில் அத்தாப் ஆலம், மொஹம் நபி, ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ஜாவேத் அஹ்மடி ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியில் அதிக 6 ஓட்டங்களை விளாசிய வீரராகவும் போட்டியின் ஆட்டநாயகனாகவும் மொஹமட் ஷஹ்சாத் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.