தனது நாட்டுடன் நட்பு பாராட்டும் மற்றும் மதிப்பளிக்கும் நாடுகளுக்கு மட்டுமே அமெரிக்கா  நிதியுதவி வழங்குமென அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வு இலங்கை நேரப்படி இன்று  பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐ நா தலைமையகத்தில் ஆரம்பமானது.

முழு உலகும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட பொதுச்சபை கூட்டத்தொடர் “ஐக்கிய நாடுகள் சபையை சகல மக்களுக்கும் அணுகச் செய்தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்ற ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

"சோஷலிஸம், உலகமயமாதல் என்பன தோற்றுவிட்டன. இனி உலக நாடுகளுக்கு இலவச நன்கொடை தரமாட்டோம். எந்த நாட்டு பாதுகாப்பையும் பொறுப்பெடுக்கவும்  மாட்டோம். அனைத்தையும், அமெரிக்க நலனை முன்நிறுத்தியே தீர்மானிப்போம்".

ஐக்கிய அமெரிக்காவோடு எந்தெந்த நாடுகள் மதிப்பளித்து நடக்குமோ எந்த நாடுகள் தமது நாட்டுடன் நட்பு பாராட்டி செயற்படுமோ அந்த நாடுகளுக்கு மாத்திரமே ஐக்கிய அமெரிக்கா நிதியுதவிகளை வழங்கும் எனத் தெரிவித்தார்.

தற்போது அனைத்து நாடுகளிடத்திளும் பொருளாதார மற்றும் நிதிநெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதில் ஐக்கிய அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் அதன் அடுத்தக் கட்டமாக குறித்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக பல உலக நாடுகள் பாதிப்புக்குள்ளாக உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.