இந்தியாவுக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் ஐந்தாவது போட்டியில் ஷஹ்சாத் மற்றும் நபியின் அதிரடி ஆட்டத்தினால் சரிவிலிருந்து மீண்டெழுந்த ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு வெற்றியிலக்காக 253 ஓட்டங்களை நிர்ணயித்தது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஆப்கான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதற்கிணங்க மொஹமட் ஷஹ்சாத், ஜாவேத் அஹ்மடி ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கி சிறந்ததோர் இணைப்பாட்டத்தை பெற்றுக் கொண்டனர்.

மொஹமட் ஷஹ்சாத்தி இந்திய அணிப் பந்து வீச்சாளர்களின் பந்துகளை பறக்கவிட்டு அதிரடிக் காட்ட மறுமுணையில் ஜாவேத் அஹ்மடி நிதானமாக இவருக்கு தோள்கொடுத்தாடி வந்தார்.

இதனால் 8.1 ஆவது ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 48 ஆக இருந்தபோதும் ஷஹ்சாத்தி அடுத்தடுத்து இரு நான்கு ஓட்டங்களை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 50 ஐ கடந்தது. இதனைத் தொடர்ந்து அதிரடி காட்டி வந்த ஷஹ்சாத்தி 8.5 ஆவது ஓவரில் 37 பந்துகளை எதிர்கொண்டு அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

எனினும் 12.4 ஆவது ஓவரில் ஜடேஜாவின் பந்து வீச்சில் ஜாவேத் அஹ்மடி 5 ஓட்டத்துடன் தோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேற, ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரியத் தொடங்கின.

அதன்பிரகாரம் ரஹ்மத் ஷா 3 ஒட்டத்துடனும், ஹஷ்மத்துல்லா ஷஹதி மற்றும் அணித் தலைவர் அஸ்கர் ஆப்கான் ஓட்டம் எதுவும் பெறாது டக்கவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 15.3 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 82 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய குல்பாடின் நாய்ப்புடன் ஜோடி சேர்ந்தாடி வந்த ஷஹ்சாத்தி, 28.1 ஆவது ஓவரில் 1 நான்கு ஓட்டத்தை விளாசி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது 5 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இந் நிலையில் 28.4 ஆவது ஓவரில் குல்பாடின் நாய்ப் 15 ஓட்டத்துடன் சாஹருடைய பந்தில் ஆட்டமிழந்து வெளியேற ஆப்கானிஸ்தான் அணி 33.4 ஆவது ஓவரில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை கடந்தது.

எனினும் 37.5 ஆவது ஓவரில் அதிரடியாக ஆடிவந்த ஷஹ்சாத்தி 7 ஆறு ஓட்டங்கள், 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 124 ஓட்டத்துடன் கேதர் யாதவினுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறியதையடுத்து மொஹமட் நபி மற்றும் நஜிபுல்லா ஸத்ரான் ஜோடி சேர்ந்தாடி வர ஆப்கானிஸ்தான் அணி 40 ஓவர்களில் 6 பறிகொடுத்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

43.3 ஆவது ஓவரில் 45 பந்துகளை எதிர்கொண்டு ஆடிவந்த நபி சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 12 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதன்பின்னர் அணியின் ஓட்ட எண்ணிக்கை 226 இருக்கும் போது நஜிபுல்லா ஸத்ரான் 20 ஓட்டத்துடன் ஜடேஜாவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க ரஷித்கான் ஆடுகளம் நுழைந்தார்.

இந் நிலையில் போட்டியில் அதிரடி காட்டி வந்த மொஹமட் நபி 56 பந்துகளில் 4 ஆறு ஒட்டங்கள், 3 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 64 ஓட்டத்துடன் கலீலுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்மூலம் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 253 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

ஆடுகளத்தில் ரஷித் கான் 12 ஓட்டத்துடனும், அத்தாப் ஆலம் 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும், கலீல் அஹமட், தீபக் சாஹர் மற்றும் கேதர் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.