மக்களின் அடிப்படை தேவைகளாக இருக்கின்ற சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்படுகின்றபோது சரியான தேவைகளை அறிந்து சரியான முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 12 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட விசேட சத்திர சிகிச்சை நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  

வடமாகாணத்தில் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் மிக அவசியமானதும், உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல இருக்கின்றபோதும் தேர்தல்களை அல்லது அரசியல் இலாபங்களை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுவதை இங்கே தான் நாங்கள் காண்கின்றோம்.

இந் நிலையல் ஒரு குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு அல்லது குறிப்பிட்ட பகுதிக்கு பெருமளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சுமார் 30 மில்லியன் ரூபாவுக்கு மேல் ஒதுக்கீடு செய்து அதனை உடனடியாக டிசம்பர் மாதத்திற்குள் செலவு செய்யுங்கள். எதையாவது வாங்குங்கள் என பலவந்தப்படுத்துகின்றனர்.

ஆனால் இங்கே அவசர தேவையாக காணப்படுகின்ற சத்திர சிகிச்சைக்கான கட்டிலை வாங்குவதற்கு எங்களிடம் பணம் இல்லை. ஆனால் சில பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.