காலநிலை மாற்றம் காரணமாக 2050 ஆம் ஆண்டுகளில் இலங்கை தனது மொத்த தேசிய உற்பத்தியின்  7 வீதத்தினை இழக்கலாம் என உலகவங்கியின் இலங்கைக்கான இயக்குநர் - தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஆரம்பமாகியுள்ள தகவமைப்பு சமூக பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை வறுமையை ஒரு வீதத்தினால் குறைத்துள்ளது. அதன் தற்போதைய தேசிய வறுமை மட்டம் 4.1 வீதமாக காணப்படுகின்றது.

இலங்கையர்கள் அனைவரும் அறிந்த பாரிய ஆபத்தொன்று குறித்து  இந்த மாநாடு கவனம் செலுத்துகின்றது. பேரிடர் ஆபத்தே அது.

இலங்கை வருடாந்தம் இயற்கை அனர்த்தங்களை சந்திக்கின்றது. கடந்த 2016 மற்றும் 2017 இல் அது பல அனர்த்தங்களை சந்தித்தது எனத் தெரிவித்தார்.

கடந்த வாரம் கொழும்பில் வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கையின் படி அதிகரிக்கும் வெப்பநிலை, பருவப்பெயர்ச்சி மழை வீழ்ச்சியில் மாற்றங்கள் காரணமாக அடுத்த 2050 ஆம் ஆண்டளவில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏழு வீதங்களை இழக்க நேரிடும்.

மேலும் மக்களின் அரைவாசிக்கும் அதிகமானவர்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படும். பாதிப்பின் அதிர்ச்சி காரணமாக மக்களின் வருமானத்தில் 20 வீதம் இழக்கப்படுமானால் ஐந்து வீத மக்கள் வறுமையின் பிடியில் சிக்கும் ஆபத்துள்ளதாக நாங்கள் மதிப்பிடுகின்றோம்.

உயிர்களை அழிப்பதன் மூலமும் சொத்துக்களை அழிப்பதன் மூலமும் வர்த்தக நடவடிக்கைகளை குழப்புவதன் மூலமும் பேரழிவுகள் வறுமையின் பிடியில் சிக்குபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறனை கொண்டவையாக காணப்படுகின்றன.

இலங்கை அதிகமதிகமாக தொடர்ச்சியான, கடுமையான அதிர்வுகளை எதிர்கொண்டுவருகின்றது. 2017 ஆரம்பத்தில் இலங்கை கடந்த நான்கு தசாப்த காலப்பகுதியில் மோசமான வெள்ளத்தை சந்தித்தது.

மே மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகள் 219 உயிர்களை பலியெடுத்ததுடன் 80,000 வீடுகளை அழித்தன. உணவு மற்றும் தங்குமிடங்கள் ,காப்புறுதி கொடுப்பனவுகள் மூலம் பாதிக்கப்பட்ட வீடுகளின் தேவைகளை உடனடியாக கவனிக்ககூடிய வலு இலங்கை அரசாங்கத்திடமிருந்தது.

எனினும் மீளுதல் மற்றும் மீள் ஒருங்கிணைப்பிற்கான திட்டங்கள் தற்காலிகமானவையாகவே காணப்பட்டன.வெள்ளத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ,வீடுகள் குறித்த உரிய தரவுகள் இல்லாதமையினால் அவர்களுடய தேவைகள் குறித்து கண்டறிவது கடினமானதாக இருந்தது. மேலும் இடர்களின் போது அமைச்சுகளிற்கு இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்பதும் புலனாகியது.

பேரிடரை எதிர்கொள்ளும் திறனை அதிகரிப்பது இலங்கைக்கான அபிவிருத்தி முன்னுரிமைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இதனை இலங்கை 2025 ற்கான தொலைநோக்கு மூலோபாயத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது. வரட்சி ,வெள்ளம் போன்ற அதிர்ச்சிகள் இவற்றை எதிர்கொள்ளும் திறனற்ற குடும்பங்களையும் வறிய மக்களையும் தீவிரமாக பாதிக்கின்றன. பேரிடர் இடம்பெறுவதற்கு முன்னரே இவ்வாறான மக்கள் மத்தியில் அதனை எதிர்கொள்வதற்கான வலுவை அந்த மக்கள் மத்தியில் அதிகரிக்கவேண்டும்  மேலும் பாதிப்பு நிகழ்ந்த பின்னர் பாதிக்கப்பட்ட மக்களிற்கு துரிதமாக உதவிகளை வழங்கக்கூடிய பொறிமுறைகளை உருவாக்கவேண்டும் என்ற பொதுக்கருத்து உருவாகி வருகின்றது.இதனை சாதிப்பதற்கு இலங்கை தனது பணம் வழங்கும் திட்டங்கள் - மேலும் வாழ்வாதார திட்டங்கள் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீள் எழுச்சி மற்றும் ஒருங்கிணைப்பு  போன்றவற்றிற்கு தீர்வை காணும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும்

இலங்கையில்  பேரிடரிற்கான உதவிகளை வழங்குவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் தற்போது காணப்படுகின்றன. 

இலங்கை, உலக வங்கியின் உதவியுடன் தனது சமூக பாதுகாப்பு வலையமைப்பை மேலும் நவீனப்படுத்தும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளது. புதிய சமூக பதிவேடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதுடன் அடுத்த வருடமளவில் அது நடைமுறைக்கு வரும். முக்கிய நலன்புரி திட்டங்களின் பயனாளர்கள் குறித்த பதிவுகளை  விபரங்களை இதுவே கையாள உள்ளது.வெளிப்படைதன்மை  மற்றும் பக்கச்சார்பின்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பயனாளர்களை தெரிவு செய்வது சுயாதீன அமைப்பொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.அந்த அமைப்பு ஒழுங்கமைக்கப்பட்ட இலத்திரனியல் முறையை பயன்படுத்தி அவர்களிற்கு பணவழங்கலை முன்னெடுக்கும்.

பேரிடர் உதவி வழங்கலை புதிய பாதுகாப்பு வலையமப்பு ஊடாக ஒழுங்படுத்துவது குறித்து அரசாங்க மட்டத்திலும் அரசாங்கத்தின் அபிவிருத்தி சகாக்கள் மத்தியில் ஆர்வம் காணப்படுகின்றது.இந்த புதிய வழங்கல் முறை பல வெளிப்படை தன்மை,கொடுப்பனவுகளை வழங்கும் வேகம் உட்பட பல சாதகதன்மைகளை வழங்குகின்றது. பேரிடர் குறித்து முன்கூட்டியே எதிர்வு கூறுவதற்கும் முன்னெச்சரிக்கைக்குமான அமைப்புகளை உருவாக்குவது குறித்து பல பணிகள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.இவை அனைத்தையும் உள்ளடக்கிய நவீன பாதுகாப்பு வலையை எப்படி உருவாக்குவது என சிந்திப்பதற்கான தருணம் இதுவாகும்.

எனினும் இது குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிப்பதும் அது அனைவரையும் உள்வாங்கிய வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதும் முக்கியமானதாகும்.மேலும் சமூக பாதுகாப்பு அமைப்பு ,பல அரசாங்க திணைக்களங்கள் காணப்படும் தரவுகள் ,அமைப்புமுறைகள்,ஸ்தாபன ஏற்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவேண்டியுள்ளது.