2012ம் ஆண்டு  கொமாண்டர் கிரிசான் வெலகெதர இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிற்கு முக்கிய தகவலொன்றை வழங்கியிருந்தார். 

கொழும்பில் கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்களும் திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்திலேயே தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்ற முக்கிய தகவலை அவரே உறுதிப்படுத்தினார்.

இலங்கை கடற்படையின் புலனாய்வு அதிகாரியான வெலெகெதரவிற்கு குறிப்பிட்ட தளத்தில் அப்பாவிகள் தடுத்துவைக்கப்படுகின்றனரா என்பதை கண்டறிவதற்கான பொறுப்பை 2009 ம் ஆண்டு கடற்படை தளபதி வழங்கியிருந்தார்.

வேலெகெதர வழங்கிய தகவல்கள் 11 தமிழ் இளைஞர்கள் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்ற முக்கிய விபரங்கள் தெரிய வருவதற்கு உதவியாக அமைந்தன.

இதனை விட முக்கியமாக அந்த இளைஞர்களின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதையும் வெளிப்படுத்தியிருந்தன

இந்நிலையில் உண்மையை சொன்னமைக்காக வெலெகெதர தற்போது கடற்படையினரால்  பழிவாங்கலிற்கு உள்ளாகியுள்ளார்.

திருகோணமலையில் உள்ள கடற்படையின் கிழக்கிற்கான தலைமையகத்தில் உள்ள இரகசிய சிறைகள் உள்ளன.

கப்பம் பெறும் நோக்கில் கடற்படையினரால் கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்களும் இங்குள்ள நிலத்தடி இரகசிய சிறைகளுக்கு உள்ளேயே  இறுதியாக உயிருடன் இருந்துள்ளனர்.

இங்கு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 19 வயது ராஜீவ் நாகநாதனையும் அவரது நண்பர்களையும் இறுதியாக பார்த்தேன் என முக்கிய சாட்சியொருவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவர்கள் காணாமல்போயுள்ளனர்.

ராஜீவ் நாகநாதனும் ஏனைய நால்வரும் சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்னர்  செப்டம்பர் 27 ம் திகதி  கடத்தப்பட்டனர்.

அவர்கள் தங்கள் நண்பரான அன்வர்அலி என்பவரை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தவேளையே கடத்தப்பட்டனர்,முதலில் அவர்கள் கொழும்பு துறைமுகத்தில் உள்ள பிட்டு பம்புவ எனப்படும் கடற்படை துறைமுக சிறையில்  அடைக்கப்பட்டனர்.

செப்டம்பர் மாதம் கடத்தப்பட்ட ஐவரும் அதற்கு முன்னர் கடத்தப்பட்டவர்களும் அதற்கு பின்னர் திருகோணமலை தளத்திற்கு மாற்றப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறி;ப்பிட்ட இடத்தில் அன்வர் என்ற இளைஞனை வெலெகெதர பார்த்துள்ளார் அவ்வேளை அன்வரின் மண்டையோடு உடைந்து குருதிபெருக்கெடுத்துக்கொண்டிருந்தது என குறிப்பிடும் வெலெகெதர கடற்படையினரிற்கு உதவிய தனக்கு ஏன் இந்த கதி என அன்வரால் நம்பமுடியாமல் இருந்தது எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் படி வெலகெதரவே சிஐடியினரின் முக்கிய சாட்சியாக உள்ளார்.கடத்தப்பட்டவர்களை  2009 மார்ச் ஏப்பிரல் மாதங்களில் தான் பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009 ம் ஆண்டு மார்ச் 25 ம் திகதி வெலெகெதர திருகோணாமலையில் உள்ள கடற்படை தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவ்வேளை கடற்படையின் புலனாய்வு இயக்குநராக விளங்கிய  அட்மிரல் குருகே  கடற்படை தளத்திற்கு கைதுசெய்து கொண்டுவரப்படுபவர்கள் குறித்து கவனம் செலுத்துமாறு   வெலெகெதரவை கேட்டுள்ளார்.

செல்வந்த குடும்பங்களிடம் கப்பம் பெறும் நோக்கில் கடற்படையை சேர்ந்தவர்கள் அப்பாவி இளைஞர்களை கடத்தி திருகோணமலை தளத்தில் தடுத்து வைத்துள்ளனர் என்ற தகவல் குருகேயிற்கு கிடைத்துள்ளது.

திருகோணமலை தளத்தின் இரகசிய சிறைகளிற்கு செல்வதற்கு வெலெகெதரவிற்கு  அனுமதி  இல்லாத போதிலும் அவர் அங்கு பணியாற்றும் ஒருவரை சந்திக்க செல்வது என்ற போர்வையில் மற்றொரு நண்பருடன் அங்கு சென்றுள்ளார்.

அவ்வேளையே 11 தமிழ் இளைஞர்களையும் அவர் சந்தித்துள்ளார்.

அவர்களை குளிப்பதற்காக அழைத்து வந்திருந்தனர்,அவர்களது தலைமுடி அளவுக்கதிகமாக வளர்ந்திருந்தது அவர்கள் உரிய விதத்தில் கவனிக்கப்படவில்லை என்பது பார்த்தவுடன் தெரிந்தது என வெலெகெதர சிஐடியினருக்கு தெரிவித்திருந்தார்.

தனது பெயர் அன்வர் என தெரிவித்த இளைஞன் ஒருவனின் தலையில் பாரிய காயம் காணப்பட்டது ,  மோசமாக தாக்கப்பட்ட காயம் அது அவனது உடம்பிலும் காயங்கள் காணப்பட்டன என்னை கொழும்பில் மோசமாக சித்திரவதை செய்த பின்னரே இங்கு கொண்டு வந்தனர் என அவன் குறி;ப்பிட்டான் என வெலெகெதர தெரிவித்திருந்தார்.

இதேவேளை அன்வர் தான் ஆள்கடத்தல் கும்பலிற்கு தகவல்களை வழங்கும் நபராக செயற்பட்டதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்,இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட பலரின் பெயர்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட பல இளைஞர்களையும் தான் பார்த்ததையும் வெலெகெதர சிஐடியினரிடம் தெரிவித்துள்ளார்.

அன்வரிற்கு உரிய  சிகிச்சைகளை வழங்குமாறு அறிவுறுத்திவிட்டு வெலெகெதர தனது அலுவலகம் திரும்பியுள்ளார்.

பின்னர் சில தடவைகள் அப்பகுதிக்கு சென்றதை தொடர்ந்து அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள்  பயங்கரவாத சந்தேக நபர்கள் இல்லை அப்பாவிகள் என்பது அவரிற்கு உறுதியாகியுள்ளது

ஒவ்வொரு முறையும் அவர் அங்கு செல்லும்போது அவர்கள் வெலெகெதரவிற்கு தங்கள் கதைகளை தெரிவித்துள்ளனர்.

2009 மே மாதம் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வெலெகெதர தனது மோட்டார் சைக்கிளில் அப்பகுதிக்கு விரைந்தார்.

அவ்வேளை அப்பகுதியில் உடல்கள் போன்றவற்றை பிளாஸ்டிக் பாக்கினால் சுற்றி டிரக்கில் ஏற்றிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன் என அவர் சிஜடியினரிடம் பின்பு தெரிவித்திருந்தார்.

என்னால் அவை யாருடைய உடல்கள் என்பதை உறுதி செய்யமுடியவில்லை எனினும் பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தவர்களை கேட்டபோது அதன் பின்னர் 11 தமிழ் இளைஞர்களையும் தாங்கள் பார்க்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர் என அவர் சிஜடியினரிடம் தெரிவித்திருந்தார்.

2012 இல் நேவியின் கடத்தல் விவகாரத்திற்குள் வெலெகெதர தற்செயலாக இழுக்கப்பட்டார்.

சிஐடியினர் அவரை விசாரணைக்காக அழைத்தனர்.

ஆனால் அவரது வாக்கு மூலம் பல அதிர்ச்சி தகவல்களை வெளிக்கொணர்ந்தது.தனது வாக்கு மூலம் காரணமாக அவர் 11 இளைஞர்களும் தடுத்து வைக்கப்பட்ட இடத்தை அம்பலப்படுத்தியதுடன் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் குறித்த விபரங்கள் தெரியவந்தன

இதனை தொடர்ந்து வெலெகெதர மீது துரோகி முத்திரை குத்தப்பட்டுள்ளது.அவர் கடற்படைக்குள் இருந்து அச்சுறுத்தல்களையும் பழிவர்ங்கல்களையும் எதிர்கொள்கின்றார்.

இதன் காரணமாக ஏமாற்றமடைந்துள்ள அவர் கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழில் வீரகேசரி இணையம்