(எம்.மனோசித்ரா)

போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபையில் மண்டியிட்டு நாட்டை மீண்டும் காட்டிக்கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று தேசிய ஒழுங்கமைப்பு ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள ஒன்றித்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குதல், புதிய அரசியல் அமைப்பினூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணல் மற்றும் உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபித்து அதனூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்தல் போன்ற உறுதி மொழிகள் வழங்கி என்றும் மீளா பாதாளத்தில் நாட்டை தள்ளிவிடுவதாகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

மேலும் ஜனாதிபதியின் தற்போதைய நகர்வுகள் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானதாகும். போர் குற்றங்களை ஒப்புக்கொண்டு அதனை விசாரிக்க வேண்டாம் என்று கோருவது போலவே அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்தும் மேற்குலக நாடுகளின் சதித்திட்டத்திற்குள் இலங்கை பல வருட காலமாக சிக்குண்டுள்ளது. தற்போது அந்த சதித்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான புறச் சூழலை ஐ.நாவில் அமைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

எதிர்வரும் நாட்களில் புதிய அரசியலமைப்பிற்கான வரைவினை பாராளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைக்கவுள்ளது. அரசாங்கம் உத்தேசித்துள்ள புதிய அரசியல் அமைப்பானது நாட்டை பிளவுபடுத்தும் என்றார்.