தெரணியகலை - சபுமல்கந்த தோட்டத்தில் கத்தி குத்து தாக்குதலில் ஆணொருவர் பலியாகியுள்ளதாக தெரணியகலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது தெரணியகலை சபுமல்கந்த தோட்டம் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சத்தியவேல் ஜெயகாந்தன் என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார். தனிப்பட்ட விரோதமொன்று காரணமாக நேற்று  திங்கட்கிழமை காலை 11 மணியளவில் இரண்டு நபர்களுக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைக்கலப்பாகி கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதில் படுகாயமடைந்த நபர் ஸ்தலத்திலேயே பரிதாபகரமாக மரணித்துள்ள நிலையில் அவரது சடலமானது மரண பரிசோதனைகளுக்காக கரவனல்ல ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள தெரணியகலை பொலிஸாரால் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் சபுமல்கந்த தோட்டம் 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 35 வயதுடைய ஆணொருவரை நேற்று  மாலை கைதுசெய்துள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை அவிசாவளை நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன் இன்றைய தினம் ஆஜர்படுத்திய வேளையில் நீதவான் அவரை எதிர்வரும் அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரணியகலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.