பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் ஒரு சிறந்த தலைவர் எனத் தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சப்ராஸுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலுமே பாகிஸ்தான் அணி படுதோல்வியை தழுவிக் கொண்டது.

அது மாத்திரமல்லாது ஆப்கானிஸ்தான்  அணியுடனான போட்டியின் போதும் இறுதி ஓவரிலே வெற்றி‍பெற்றது.

இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் மீதும், அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி, சர்பராஸ் அஹமட் சிறந்த தலைவர். 

2017 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொள்வதற்காக பாகிஸ்தான் அணியை தலைமை தாங்கி வழிநடத்தியவர், அவரை போன்ற வீரர்கள் தினம் தினம் பிறந்து வர மாட்டார்கள், அவர் தைரியமானவர்.

எனவே ஆசிய கிண்ண தோல்விகளால் அவர் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களை எல்லாம் புறம்தள்ளிவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், முன்னாள் வீரர்களும் சேர்ந்து அவரை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.