பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டி.ஆர்.எஸ்.முறையை துல்லியமாக கணித்து இமாம் உல் ஹக்கை ஆட்டமிழக்கச் செய்த தோனியின் திறமையைக் கண்டு டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன. 

கிரிக்கெட் போட்டிகளின் போது சில சந்தர்ப்பங்களில் ஆட்டமிழப்பு தொடர்பாக மைதான நடுவர்களின் தீர்ப்பானது சர்ச்சையை கிளப்பிவிடுகின்றது. 

இதனால் நடுவரின் தீர்ப்பை மேன்முறையீடு செய்றதவதற்காக கிரிக்கெட்டில் டி.ஆர்.எஸ்.(Decision Review System) முறை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. 

அதாவது நடுவரின் தீர்ப்பில் சந்தேகம் தோன்றினால் அதை எதிர்த்து துடுப்பாட்ட வீரர் அல்லது களத்தடுப்பு அணியின் தலைவர் ரிவியூ கேட்கலாம்.

குறிப்பாக பந்து வீச்சு அணி, ரிவியூ கேட்கும்போது பந்து வீச்சாளரும், விக்கெட் காப்பாளரும் தான் முக்கிய பங்கு வகிப்பார்கள். பந்து சரியாக பிட்ச் ஆனதா? பந்து துடுப்பாட்ட மட்டையில் பட்டதா? ஸ்டம்பை தாக்குமா? ஸ்டம்பிற்கு மேல் செல்லுமா? என்பதை இவர்கள்தான் சரியாக கணிக்க வேண்டும்.

இதில் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான தோனி நன்கு அனுபவமுள்ளவர். இவர் ரிவியூ கேட்டால் அது கட்டாயம் ஆட்டமிழப்பாகத்தான் இருக்கும். 

ஒருமுறை ஜடேஜா தோனியின் பேச்சுக்கு செவிசாய்க்காது ரிவியூ கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் டி.ஆர்.எஸ் வெற்றி பெறவில்லை. இதனால் டோனி ஜடேஜா மீது கடும் கோபம் கொண்டார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சுப்பர் 4 சுற்றுப் போட்டியின் போது பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி வந்தது.

முதல் 7 ஓவரில் பாகிஸ்தான் விக்கெட்டை இழக்கவில்லை. இதற்கடுத்து 8 ஆவது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை இமாம் உல் ஹக் முன்னாள் வந்து தடுத்து ஆட முயன்றார். அப்போது பந்து கால்காப்பை தாக்கியது. மிக அதிக தூரம் முன்னாள் வந்து ஆடியதால் பந்து ஸ்டம்பிற்கு மேல் சென்று விடுமோ? என்ற சந்தேகம் சாஹலுக்கும் அணித் தலைவர் ரோஹித் சர்மாவிற்கும் எழுந்தது.

ஆனால் தோனி எதையும் பற்றி யோசிக்காது ரிவியூ கேட்க ரோஹித் சர்மாவுக்கு சைகை காண்பித்தார். தோனியிடமிருந்து சைகை வந்ததும் ரோஹித் சர்மாவும் யோசிக்காமல் ரிவியூ கேட்டார், இறுதியில் இமான் உல்ஹக் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் தோனியின் அறிவாற்றலை கண்டு டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன.