அரசாங்கம் பிளவடைந்து காணப்படுகின்றது. இதனால் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. வடக்கில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் தெற்கில் அவ்வாறு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் இரண்டாக பிளவடைந்துள்ளமையால் நாட்டில் அரங்கேறுகின்ற முக்கிய பிரச்சினைகளை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது. ஒழுக்கமற்ற குழப்பமான சமூதாயத்தையே அரசாங்கத்தால் தோற்றுவிக்க முடிந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் குற்றச்செயல்கள் பதிவாகின்றன. போதைப்பொருள் சுழற்சி அதிகரித்துள்ளது. கொலை, கொள்ளைகள் ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்றன. ஒழுங்கு இல்லாத குழப்பமான சமூகத்திலேயே தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வடக்கிற்கு தனியான சட்டமும் தெற்கில் தனி சட்டமும் காணப்படுகின்றது. வடக்கில் காணப்படும் ஆவா குழுவை கட்டுப்படுத்த அனுமதி கோர வேண்டிய நிலை ஏற்படுட்டுள்ளது. இதுவே தெற்கில் இவ்வாறான அனுமதிகளை பெறவேண்டிய தேவையில்லை. 

எனவே தற்போதைய சமூகத்தில் தமது பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோர் மிக விழிப்புடன் செயற்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.