அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அமெரிக்க அதிபர் ட்ரம்பால் பரிந்துரை செய்யப்பட்ட பிரெட் கெவனொக் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

பிரெட் கெவனொக்கை உச்ச நீதிமன்ற நீதிபதியாக ட்ரம்ப் பரிந்துரைத்த பின்னர் செனட் சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந் நிலையில் பிரெட் கெவனொக் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகளை தொடர்ந்து செனட் சபை வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இவ் விடயம் குறித்து செனட் சபை நீதிக்குழு நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில்  பிரெட் கெவனொக் மீது 53 வயதான தெபோரா பாலியல் குற்றம் சுமத்தியுள்ளார்.

1983ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் கெவனொக் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெபோரா குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு பல பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும் இக் குற்றச்சாட்டுக்களை நீதியரசர் பிரெட் கெவனொக் மறுத்துள்ளார்.

தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் தான் எப்போதும் பாலியல் ரீதியாக யாரையும் தாக்கியதில்லை என்றும் உயர் நிலைப் பள்ளியில் மட்டுமல்ல எந்த இடமாயினும் பெண்களுக்கு மரியாதை செலுத்தவதுடன் மரியாதையுடன் நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க பிரெட் கெவனோக்கின் பரிந்துரைக்கெதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டு பிரெட்டின் நியமனத்திற்கெதிரான தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.