இந்தியா வேலூர் மாவட்டத்தில் மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காத கணவன் தனது இரு பிள்ளைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

36 வயதான வெங்கடேசன் என்ற நபர் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மனைவி 32 வயதான கமலா என்பவராவார்.

இத் தம்பதிகளுக்கு 9 மற்றும் 7 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.

இந் நிலையில் நேற்று கமலா கீரை வியாபாரத்திற்கு சென்று வீடு திரும்பிய போது தனது இரு பெண் குழந்தைகளும் கணவரும் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தை அறிந்துக்கொண்ட  அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரினதும் சடலங்களை மீட்டதோடு வெங்கடேசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதிய கடிதம் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

அக் கடிதத்தில் தனது மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காது எனவும் இது தொடர்பாக இருவருக்குள்ளும் பல முறை வாக்குவாதங்கள் நடைபெற்றதாகவும் எழுதப்பட்டிருந்தது.

பல நாள் சண்டைகளையும் மீறி மனைவி வேலைக்கு செல்வதனால் ஏற்பட்ட மன விரக்தியினால் தனது இரு குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக அக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வேலூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.