(இராஜதுரை ஹஷான்)

தேசிய அரசாங்கத்தில்  ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும்  இடையில்   எவ்விதமான உட்பூசல்களும் கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் சமூக பிரச்சினைகள்  தொடர்பில் ஆராயந்து மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு கூட்டத்தில் கட்சி உறுப்பினர்களை மையப்படுத்தி  குழு நியமிக்கப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கூட்டரசாங்கத்தில் இரண்டு பிரதான கட்சிகளுக்குமிடையில்  உட்பூசல்கள்  உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக  வெளியாகியுள்ள விடயம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன் தேசிய அரசில் ஐக்கிய தேசிய கட்சியுடன்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்து செயற்படுமா என்ற தீர்மானத்தை  ஜனாதிபதி இவ்வருட இறுதிக்குள் மேற்கொள்வார் என்று  குறிப்பிடும் செய்திகள் முற்றிலும் பொய்யானது. 

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகும் நோக்கம் இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் கிடையாது. 2020 ஆம் ஆண்டு வரையில் கூட்டரசாங்கம்  இணைந்தே செயற்படும்  இதில் எவ்வித மாற்றங்களும் கிடையாது என்றார்.