2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை நாம் வெல்வது கடினமே. காரணம் கிரிக்கெட் அந்தளவு தூரம் இன்று கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு புக்கி கரர்களளே பிரதான காரணம் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவர் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைபடுத்தி புக்கிகரர்களையும் சூதாட்டக்காரர்களையும் கிரிக்கெட் நிர்வாகத்தில் சேர்க்கவில்லை. 

ஆனால் தயாசிறி விளையாட்டுத்துறை அமைச்சரானதும் என்ன நடந்தது? அவர் ஒரு சட்டத்தரணி எனினும் கிரிக்கெட் சட்டத்தை சரியாக தெரியாமல் கிரிக்கெட் நிர்வாகத்தில் புக்கிகாரர்களையும் சூதாட்டக்காரர்களையும் வரவழைத்தார். 

இன்று புக்கிகாரர்களினாலேயே நாட்டின் கிரிக்கெட் விளையாட்டு சிதைந்துபோய் உள்ளது. ஆகவே கிரிக்கெட் கீழ்நிலைக்கு சென்றதற்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும்.

அத்துடன் தயாசிறி நினைப்பது அவர் ஒரு சிறந்த வீரர் என்று. தனது உடல் கட்டமைப்பை காட்டி ஒருவர் வீரராக முடியாது.  தயாசிறி கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க நிதிகொடுத்தார் என சொல்லப்படுகிறதே, எவ்வளவு நிதி போயுள்ளது என்பதை தேடிப்பாருங்கள். 

அந்ந நிதி உண்மையில் விளையாட்டு மைதானம் அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளதா? நான் நினைக்கின்றேன் தயாசிறியை பற்றி என்னிடம் கேட்பதை விட ஜீ.எல் பீரிஸ் அல்லது மஹிந்த ராஜபக்ஷவிடம் கேளுங்கள்.  அவர்கள் சொல்வார்கள் தயாசிறி யார் என்று. 

மேலும் நான் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே எதிர்வு கூறினேன் இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடனும் ஆப்கானிஸ்தான் அணியுடனும் தோல்வியை தழுவிக் கொள்ளும் என்று அவ்வாற‍ே இன்று நடந்துள்ளது. ஏனெனில் இன்று அந்தளவுக்கு எமது கிரிக்கெட் கீழ்நிலைக்கு சென்றுள்ளது. 

ஆனால் எமது வீரர்களை எம்மால் முன்னேற்ற முடியும். நான் எப்பாதும் சொல்வது யாப்பினை மாற்றுங்கள். அதன் பின் தேர்தலை நடத்துங்கள். அது வரை தற்காலிக குழுவொன்றை நியமியுங்கள். அப்படி அமைக்க முடியவில்லை என்றால் முன்னாள் வீரர்களை பயன்படுத்தி, கிரிக்கெட்டை முன்னேற்றுங்கள். தற்போதைய அமைச்சருக்கும் இது தொடர்பான பொறுப்புள்ளது.

அத்துடன் ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி அடைந்த தோல்விக்கு அணித்தலைவரை குறைசொல்ல முடியாது. தெரிவுக்குழு முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.