(க.கிஷாந்தன்)

 

மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மஸ்கெலியா ஓயாவில்  நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

 

இச் சம்பவம்  இன்று காலை 10 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

 

மஸ்கெலியா சாமிமலை கவரவில தோட்டத்தில் உறவினர் வீட்டிற்கு வந்த இவா் இன்று காலை தனியாக நீராடச் சென்றுள்ளார்.

 

 இவர் நீராடிக் கொண்டிருக்கும் போது திடீரென காணாமல் போயுள்ளதாக அப்பிரதேசத்தில் இருந்த பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

 

அதன் பின்  காணாமல் போனவரை பிரதேசவாசிகள் தேடும் பணியில் ஈடுப்பட்ட போது சுமார் 1 மணித்தியாலயங்களின் பின் சடலத்தை மஸ்கெலியா ஓயாவிலிருந்து மீட்டுள்ளனா்.

 

இவ்வாறு உயிரிழந்தவா் பாணந்துறை பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கதக்க எஸ்.பாக்கியநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனா்.

 

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.

 

குறித்த இளைஞன் பாணந்துறையிலிருந்து மஸ்கெலியா சாமிமலை கவரவில பகுதியில் உறவினரின் வீட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.