மெக்சிகோவில் மரியோ கோமஸ் என்ற ஊடகவியலாளர்  துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாடு ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக விளங்குகிறது. 2017 ஆம் ஆண்டு அங்கு 11 ஊடகவியலாளர்களும், 2016 ஆம் ஆண்டும் 11 பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இல்லை.

இந்த நிலையில் அங்கு சியாபஸ் மாகாணத்தின் யாஜலான் நகரில் மரியோ கோமஸ் என்ற ஊடகவியலாளர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த இருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி விட்டு அங்கிருந்து தப்பினர்.

மரியோவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த படுகொலைக்கு அங்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.