மலையக பிராந்தியத்துக்கான அதிகார சபை உருவாக்கமும் பிரதேச சபை சட்டத்திருத்தமும் மலையக பெருந்தோட்டத்தின் எதிர்கால அபிவிருத்தியை தீர்மானிக்கும் ஒரு செயற்பாடாகவே அனைவராலும் பார்க்கப்படுகின்றது. 

நல்லாட்சி அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு கிடைத்த ஒரு நிரந்தர வரப்பிரசாதம் என்று இதைக் கூறலாம். மட்டுமன்றி தமிழ் முற்போக்குக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளும் இதன் பின்னணியில் செயற்பட்டது மட்டுமல்லாது மலையக சமூகத்திலிருந்து உருவான கொள்கை வகுப்பாளர்கள்,கல்வி புலத்தினரின் ஆலோசனைகளை மதித்து அதை ஏற்றுக்கொண்டு தமது அரசியல் அதிகாரத்தையும் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியாகவும் இது போற்றப்படுகின்றது. 

மட்டுமன்றி மலையக அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்ட திருத்தம் தொடர்பில் மலையக பெருந்தோட்டப்பகுதி மக்களுக்கு தௌிவுபடுத்தும் செயற்பாடுகளிலேயே தமிழ் முற்போக்குக்கூட்டணியின் அடுத்த கட்ட வெற்றியும் தங்கியுள்ளது

மலையக அதிகார சபை உருவாக்கத்துக்கான சட்ட அங்கீகாரம்  பாராளுமன்றில் கிடைத்துள்ளதால் இனி அதை உருவாக்குவதற்கான  செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் . மலையக மக்களுக்கான அபிவிருத்திகளை இனி மத்திய அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ள முடியும் என்பதோடு நிதி ஒதுக்கீடு மற்றும் சட்டரீதியாக காணிகளை விடுவித்தல் போன்ற விடயங்களில் போராட வேண்டிய சூழ்நிலைகள் இருக்காது என்று நம்பலாம் 

.அதே போன்று பிரதேச சபை சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தினால் தோட்டப்பகுதிக்குள்  பிரதேச சபைகள் தடையின்றி   அபிவிருத்திகளை முன்னடுக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.  

ஆனால் மேற்கூறிய இரண்டு விடயங்களையும் பல போராட்டங்களுக்கு மத்தியிலேயே தமிழ் முற்போக்குக்கூட்டணியால் பெற முடிந்தது என்ற உண்மையை வாக்களித்த மக்களும் அறிய வேண்டும். 

அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் இவர்களோடு எம்.பிக்களான திலகராஜ்,அ.அரவிந்தகுமார் ,வேலு குமார் ஆகியோரும் மேற்கூறிய விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்டனர். குறிப்பாக திலகராஜ் எம்.பி. மலையக அதிகார சபை குறித்த சட்ட வரைவு தயாரிப்பிலும் பிரதேச சபை சட்ட மூல திருத்தம் தொடர்பிலும்  சட்டமா  அதிபர் திணைக்களத்துடன் இணைந்து ஆலோசனைகளைப் பெற்றிருந்தார்.

மறுபுரம் இந்த முயற்சிகளுக்கு தனது  அனுபவங்களையும் ஆலோசனைகளையும் வழங்கியதில் புதிய கிராமங்கள் மலை நாட்டு அமைச்சின் ஆலோசகர் எம்.வாமதேவனின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது.  மட்டுமன்றி அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை சிவில் சமூக செயற்பாட்டாளர்களாக இந்த விடயத்தில் வெளியிலிருந்து ஊக்குவிப்பை வழங்கிய பெ.முத்துலிங்கம் கல்வியியலாளர்களான பேராசிரியர் சோ. சந்திரசேகரம்,கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ், விரிவுரையாளர் விஜயசந்திரன்  ஆகியோரையும்  மேற்படி  பாராளுமன்ற விவாதத்தில் அமைச்சர் திகாம்பரம் பெயர் குறிப்பிட்டிருந்தமை கூர்ந்திருந்தமை முக்கிய விடயம். மற்றும் இவ்வாறான ஒரு செயற்பாடு எதிர்கால மலையக சமூகத்துக்கு அவசியம் என்பதை வலியுறுத்தி வந்த ஊடகங்களையும் இவ்விடயத்தில் நினைவு கூறுதல் அவசியம்.

தொழிலாளர்களின் ஊதிய விடயம்

 இது இப்படியிருக்க மேற்படி இரண்டு விடயங்கள் தொடர்பிலும் பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதங்களில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. 

மலையக அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்டத்திருத்தம் இரண்டுமே தொழிலாளர்களின் சம்பளத்தில் தாக்கத்தை செலுத்தாது என்பதை பிரதிநிதிகள் புரிந்து கொள்ளல் அவசியம். ஆனால் அது குறித்து அக்கறை செலுத்த வேண்டிய தரப்பிற்கு அழுத்தங்கள் கொடுப்பதே இப்போதைய தேவையாகவுள்ளது. 

தமிழ் முற்போக்குக்கூட்டணி தனது மூன்று வருட சாதனையாக இவ்விரு விடயங்களைக் கூறினாலும் உண்மையில் இந்நாட்டில் மிகக்குறைவான வளங்களுடன் வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்லும் ஒரு சமூகத்துக்குக் கிடைத்த வெற்றி என்றே கூறலாம். ஆகவே கூட்டணியின் மிகச்சிறந்த அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த நகர்வாகவே இது பார்க்கப்படுகின்றது. அதே வேளை தற்போது மலையகத்தில் பிரதானமாக தொழிலாளர்களின் சம்பள விவகாரம் பேசப்பட்டு வருகின்றது. 

இதில் முழுக்க முழுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரசே செல்வாக்கு செலுத்துகிறது. இந்நிலையில் மலையக மக்களுக்கு இரண்டு முக்கியமான விடயங்களை பெற்றுத்தந்து விட்டோம் புறக்கணிக்கப்பட்ட இம்மக்கள் இனி தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள வழிவகுத்து விட்டோம் என மார்தட்டும்  தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு இணையாக இ.தொ.கா என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்த கேள்விக்குப்பதில் தொழிலாளர்களுக்கு நியாமான சம்பளத்தைப்பெற்றுக்கொடுத்தல் என்பதாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. கூட்டு ஒப்பந்தம் காலாவதியாக சில வாரங்களே இருக்கின்ற நிலையில் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் குறைந்தது ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. 

இந்நிலையில் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாகவும் இன்றைய தினம் தலவாக்கலையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது. இதில் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் கலந்து கொள்ளவிருக்கின்றன.  

இவ்வாறான  கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எவ்விதத்திலும் தம்மை பாதிக்காது என கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் நினைத்தாலும் கூட பிரதான தொழிற்சங்கமான இ.தொ.காவிற்கு இதற்கு பதில் கூற வேண்டிய கடப்பாடு எழுந்துள்ளது. ஏனெனில் இக்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் மலையக அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்டத்திருத்த விடயங்கள் நிச்சயமாக எதிரொலிக்கும்.  

நாங்கள் இதையாவது செய்தோம் நீங்கள் தொழிலாளர்களுக்கு என்ன செய்யப்போகின்றீர்கள் என்ற கேள்விக்கு சம்பள விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டே இ.தொ.கா பதிலளிக்க வேண்டியுள்ளது.

சில நேரங்களில் இ.தொ.கா ஆதரவாளர்கள் மத்தியிலும் இந்த கேள்விகள் எழக்கூடும். எவ்வித கட்சி தொழிற்சங்க பேதமின்றியே மலையக அதிகார சபையின் அனுகூலங்களை தொழிலாளர்கள் அனுபவிக்கப்போகின்றனர். சம்பள விவகாரத்திலும் அதே நிலைமையே உள்ளது. எனவே தொழிலாளர் சம்பள விடயத்தில் இம்முறை இ.தொ.காவிற்கு நெருக்கடிகளும் அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. 

எவ்விதத்திலும் நியாயமான சம்பளம் இல்லாத பட்சத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தொழிலாளர்களின் மத்தியில் கட்சிக்குள்ள ஆதரவை குறைத்துக்கொள்ள இ.தொ.கா தலைமை விரும்பாது. ஆகவே இம்முறை கம்பனிகளுடனான பேரம் பேசும் விவகாரம் சற்று காரசாரமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அதே வேளை இதற்கு பல்வேறு பட்ட அழுத்தங்களும் பின்புலமாக இருக்கப்போகின்றன. 

புதன்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித ஹேரத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலேயே அதிக அக்கறையுடன் உரையாற்றியிருந்தார்.

கடந்த 19 வருடங்களில் தொழிலாளர்களின்  சம்பளம் 399 ரூபாவினால் மட்டுமே அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட அவர் வருடாந்தம் 21 ரூபா என்ற அளவிலேயே அவர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது என்றும் தெரிவித்திருந்தார். இவை எல்லாவற்றிற்கும் பதில் கூற வேண்டிய தேவை இ.தொ.காவிற்கு உள்ளது. அந்த பதிலை கூட்டு ஒப்பந்தத்தினால் மட்டுமே வழங்க முடியும் என்பதே உண்மை நிலையாகும்.

சிவலிங்கம் சிவகுமாரன்