இரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில் சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட விஜேரத்தினத்தின் கொலைக்கு பின்னணியாக இருக்கும் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கனேஷன் தெரிவித்தார்.

இரத்தினபுரி கொலுவாவில் கடந்த 19 ஆம் திகதி கடந்தப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட

இரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தை சேர்ந்த விஜேரத்தினத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் மனோ கணேஷன் இன்று இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

மேற்படி கொலை செய்யப்பட்ட விஜேரத்தினம் என்ற இளைஞன் கசிப்பை ஒழிப்பதற்காக பொலிஸாருக்கு ஆதரவாக செயல்பட்டார். 

இவ்வாறு செயல்பட்ட இந்த இளைஞன் கொலை செய்யப்பட்டமை குறித்து நான் கவலையும் மனவருத்தமும் அடைகின்றேன். இது சம்பந்தமாக பொலிஸார் வெட்கப்பட வேண்டும்.

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உயர் அதிகாரிகள் கசிப்பு விற்பனைக்கு எதிராக செயல்பட்டு வந்தபோதிலும் கீழ்மட்ட பொலிஸ் அதிகாரிகள் கசிப்பு விற்பனைக்கு ஆதரவாக செயல்படுகின்றார்கள். இதை எனக்கு உறுதியுடன் கூற முடியும்.

மேற்படி கொலை செய்வதற்கு ஆதரவாக செயல் பட்டவர்களை கைது செய்துள்ளீர்களா இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை எத்தனை பேரை கைது செய்துள்ளீர்கள்? பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளீர்களா என்று நான் தற்போது பொலிஸாரிடம் கேள்வி எழுப்பிவிட்டு தான் வந்தேன்.

இது குறித்து உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கலந்துரையாடியுள்ளேன். கொல்லப்பட்ட இளைஞன் மீண்டும் எழும்பி வரபோவதில்லை அவரது மனைவி தனிமையாகிவிட்டார்.

கசிப்பு மற்றும் போதைப்பொருள் விற்பனை என்பன இந்த நாட்டில் சட்டத்திற்கு விரோதமான செயல். இதை முற்றாக ஒழிப்பதற்கு ஜனாதிளதி தேசியமட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது தேசிய மட்டத்தில் கசிபை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும் இரத்தினபுரி பொலிஸாருக்கு இதை செய்ய முடியாது போனது ஏன்?

மேற்படி பிரச்சினைக்கு காரணகர்தாவாகவும் பிரதான சந்தேகநபராகவும் விளங்கும் சிறிபால என்பவரை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த பிரச்சினை இன்று நேற்றல்ல தொடர்ந்து இடம்பெற்றுவரும் பிரச்சினை எனவே இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதற்கு நான் முன்னின்று போராடுவேன் என்று அமைச்சர் மனோ கனேஷன் மேலும் தெரிவித்தார்.