நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் வாக்குறுதி வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது வரை அவ் வாக்குறுதிகள் அரசால் நிறைவேற்றப்படாத நிலையில் மக்களோடு இணைந்து போராட வர வேண்டும் என வெகுஜன அமைப்புக்கள் ஒன்று கூடி அழைப்புவிடுத்துள்ளன.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். தம்மை புனர்வாழ்வழித்தேனும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்நிலையில் இவர்களது இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தாம் மேற்கொள்ளவுள்ள போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பானது இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட  வெகுஜன அமைப்புக்களில் பிரதிநிகளில் ஒருவரான முன்னாள் அரசியல் கைதியான முருகையா கோமகன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி சா.தனுஜன ஆகியோரே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் நிறைவடைந்து ஒன்பது வருடம் ஆகிவிட்ட நிலையில் தொடர்ச்சியாக அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது 100 நாட்கள் வேலைத் திட்டத்தினூடாக அரசியல் கைதிகளின் விடயத்தை கையாள்வதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அவ்வாறு நூறு நாட்களை கடந்தும் அரசியல் கைதிகள் தொடர்பாக தீர்க்கமான இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படாமலே போய்விட்டது. இத்தகைய சூழ்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் தமது கோரிக்கையை முன்வைத்து கடந்த ஜந்து தடவை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது ஒவ்வொரு முறையும் தமிழ் அரசியல் தலமையினால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அவர்களது போராட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு முறை கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் வைத்து இரா.சம்மந்தன்,  தாம் கடவுளை போல ஜனாதிபதியை நம்புவதாகவும் அவர் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு பெற்றுத் தருவதாகவும் தெரிவித்து அப்போது போராட்டத்தை முடித்து வைத்திருந்தார்.

ஆனாலும் அதன் பின்னரும் இன்றுவரை அப் பிரச்சனை முடிந்தபாடில்லை. கடந்த காலங்களில் ஜே.வி.பி யினரின் கிளர்ச்சியாளர்களுக்கு பொது மன்னிப்பு அழித்து விடுதலை செய்யபட்டிருந்தார்கள். எனவே தமிழ் அரசியல் கைதிகளினையும் அது போன்று செய்ய வேண்டும்.

இந்நிலையில் இந்த விடயத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பாரிய பொறுப்பு தமிழ் தலமைகளிற்கு உண்டு. மேற்கூறியது போல தமிழ் தேசிய கூட்டமைப்பானது தாம் கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக அரசாங்கம் நடந்துகொள்ளாத நிலையில் அரசாங்கத்தின் அச் செயற்பாட்டில் இப்போதாவது அதிருப்தி ஏற்பட்டு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்றவர்களாக இருந்தால் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தில் பங்கெடுத்து மக்கள் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும்.

இதனூடாக மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்தினூடாக அரசாங்கத்திற்கு அழுத்தைத்தை பிரயோகிக்க அத் தலமைகள் முன்வர வேண்டும். அதே போன்று வடக்கு மாகாண முதலமைச்சரும் இது தொடர்பாக கடிதங்களை ஜனாதிபதிக்கு எழுதி அது எதுவும் கவனிக்கப்படாத நிலையில் அவரும் அரசாங்கத்தில் நம்பிக்கையிழந்தே உள்ளார். எனவே அவரும் இப் போராட்டத்தில் இணைந்து அனைத்து தரப்பினருமாக மக்கள் போராட்டத்திற்கு ஆதரவழிக்க வேண்டும் என்றனர்.