அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு வழங்கப்படவுள்ள உலகக் கிண்ணத்தை உலகை சுற்றி எடுத்துச் செல்லும் பயணத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் இது தற்போது இலங்கையில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. 

இக்கிண்ணம் நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. 

1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் உலகக் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உலகக் கிண்ணத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்கவுடன் இலங்கை கிரிக்கட் அணியினரும் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றிய முன்னாள் கிரிக்கட் வீரர்களான ரொஷான் மஹாநாம, ரொமேஷ் கலுவிதாரன ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். 

இதேவேளை தேசிய ரூபவாஹினியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள —Earth Watchman˜ மர நடுகை திட்டத்தின் அறிக்கை தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் இநோக்கா சந்தியாங்கனியினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

கிரிக்கட் போட்டிக்காக பயன்படுத்தப்படும் கிரிக்கட் மட்டையை தயாரிப்பதற்கு மரக் கட்டைகள் பயன்படுத்தப்படுவதால் இந்த மர நடுகை திட்டம் உலகக் கிண்ணத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படுகின்றது.

அமைச்சர் பைசர் முஸ்தபா, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.