இந்தியாவின் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டினூடாக இலங்கைக்கு கடத்தவிருந்த 229.8 கிலோ கஞ்சாவை இந்திய வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வருவாய்த்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் வாகனங்களில் பொலிஸாரின் உதவியுடன் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்போது கார் ஒன்றில் 229.8 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற இருவர் கையும் களவுமாக பிடிபட்டனர்.

இந்நிலையில் அவர்களிடமிருந்த கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்கள் இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்களை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.