தானமாகப் பெறப்படும் கல்லீரலை அதிக நேரம் பாதுகாப்பதற்கு கருவி ஒன்று கண்டறியப்பட்டிருக்கின்றது என வைத்தியர் அனில் தெரிவித்துள்ளார். 

 மனிதர்களுக்கு உடலுறுப்பு மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்வது என்பது சாதாரண ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. வளர்ந்த வைத்திய  தொழில்நுட்பங்களும், சத்திர சிகிச்சை முறைகளும் இதற்கு துணி புரிகின்றன. இந்நிலையில் தற்போது மூளைச்சாவு அடைந்தவர்கள் தங்களின் ஏனைய உடல் உறுப்புகளை தானமாக வழங்கி வருவது அதிகரித்து வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான போக்கு ஆகும். இதனை முழுமையாக பயன்படுத்திட வைத்தியதுறை ஏராளமான புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.

இருந்தாலும் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறப்படும் கல்லீரல், கண், சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மற்றவர்களுக்கு பொருத்திவிடவேண்டும் என்ற சூழல் இருக்கிறது. அத்துடன் தானமாகப் பெறப்படும் உடலுறுப்புகளை நீண்ட நேரத்திற்கு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், பாதுகாப்புடன் எடுத்து செல்லவும் போதிய கருவிகளும், தொழிலநுட்பங்களும் இல்லாத நிலையே இருந்து வந்தது.

இந்நிலையில் மூளைச்சாவால் மரணமடைந்தவர்களிடமிருந்து பெறப்படும் கல்லீரலானது எட்டு மணித்தியாலம் முதல் பத்து மணித்தியாலம் வரை மட்டுமே பாதுக்காக்க முடியும் என்ற நிலையே சில காலம் முன்பு வரை இருந்தது. அத்துடன் கல்லீரல் திசுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் முடிவதில்லை.

தற்போது வைத்தியர்கள் ஓர்கனேக்ஸ் மெட்ரோ என்ற புதிய கருவியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த கருவியின் மூலம் தானமாகப் பெறப்படும் கல்லீரலை அதிகபட்சமாக 24 மணித் தியாலம் வரை பாதுகாப்பாக வைத்திருத்து, தேவைப்படுவோருக்கு சத்திர சிகிச்சை மூலம் பொருத்த முடியும்.

அத்துடன் இத்தகைய கருவியைப் பயன்படுத்தும் போது கல்லீரல் திசுக்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கவும் முடியும். அதே தருணத்தில் தானமாகப் பெறப்பட்ட கல்லீரலை இத்தகைய கருவியில் எம்முடைய உடல் வெப்ப நிலையின் அளவிலேயே வைத்து பராமரிக்கவும் முடியும். வேறிடத்திற்கும் கல்லீரலை எடுத்துச் செல்ல முடியும். இத்தகைய கருவி ஒன்றை அண்மையில் சென்னையில் இயங்கி வரும் அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.