''சிலர் பிரிந்துபோக விரும்புவதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு''

Published By: Digital Desk 4

22 Sep, 2018 | 12:36 PM
image

எதிர்க்கட்சித் தலைவரும்  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் விசேட செவ்வி 

வட மாகாண சபை  தொடர்பில்  ஒரு பொதுவான அபிப்பிராயம் உள்ளது. அதாவது   இன்னும் கூடுதலான  கருமங்களை  வட மாகாண சபையில் நிறைவேற்றியிருக்கலாம் என்ற ஒரு அபிப்பிராயம்   காணப்படுகின்றது. அந்தவகையில்  இன்னும் கூடுதலான கருமங்கள் நடைபெற்றிருந்தால்   அது எங்களுக்கு சந்தோஷத்தை தந்திருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும்  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்  தெரிவித்தார்.   

விசேட செவ்வியிலேயே  அவர் இதனைக் குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு:

கேள்வி: இந்திய விஜயத்தின் போது  அந்நாட்டு பிரதமருடனான சந்திப்பு எவ்வாறு அமைந்தது?

பதில்: நாங்கள் இந்தியப் பிரதமரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம்.  சபாநாயகரின் தலைமையில்   கட்சித் தலைவர்களே இந்த விஜயத்தில் இடம்பெற்றனர்.   இலங்கையின்  அனைத்துப் பிராந்தியங்களிலிருந்தும்   பாராளுமன்ற உறுப்பினர்கள்  இந்தியா  வந்துள்ளமை தொடர்பில்   பிரதமர் மோடி மகிழ்ச்சி  வெளியிட்டார்.   நானும் பிரதமர் மோடியும்   சில கருத்துக்களை நேரடியாக பகிர்ந்துகொண்டோம்.   முக்கியமாக  சில விடயங்களை அவரிடம் வலியுறுத்திக்கூறினேன்.  

அதாவது இலங்கையில் வாழும் தமிழ் மக்கள்   தாங்கள்  இலங்கை நாட்டுக்குரியவர்கள், இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள்  இலங்கை தங்களுக்குரிய நாடு   தங்களுக்கு உரித்தான நாடு என்ற உணர்வுடன்   வாழ முடியாத ஒரு நிலைமை காணப்படுகின்றது.   நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த நிலைமை நீடிக்கின்றது. காரணம்   அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அவர்களுக்கு  கொடுக்கப்படவேண்டிய அந்தஸ்து சமத்துவமான உரிமைகள்     கொடுக்கப்படவில்லை.  ஆகவே     இலங்கையில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இலங்கைத் தீவில் தாங்கள் ஒரு இரண்டாந்தர பிரஜைகளாகவே கருதப்படும் நிலைமை காணப்படுகின்றது.  

இந்த நிலைமையை மாற்றியமைப்பது அவசியம்.  ஒரு நிரந்தரமான  அமைதியும் சமாதானமும்  ஏற்படுவது அவசியம்.   அதற்காக புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக    முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.   அந்த முயற்சிகளில் வெற்றிபெறவேண்டும்.  அந்த அரசியல் சாசனம்   நான் கூறிய  இந்த குறைகளை நீக்கக்கூடிய வகையில்   தேவையான அம்சங்களை உள்வாங்கவேண்டியது முக்கியமாகும். 

இலங்கையின் தேசிய பிரச்சினையில் இந்தியா  அக்கறை காட்டி வந்திருக்கின்றது. அமரர் இந்திரா காந்தியின் காலம் தொடக்கம்    இந்தகருமத்தில் இந்தியா  ஈடுபட்டு வந்திருக்கின்றது.  இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் கீழ்    அரசியல் சாசனம்  உள்வாங்கவேண்டிய  பல விடயங்கள்   ஏற்றுக்கொள்ளப்பட்டு   அதனடிப்படையில் இலங்கையில்  ஆட்சிமுறை இடம்பெறவேண்டும் என்ற கருத்து   ஏற்றுக்கொள்ளப்பட்டது.  ஆனால் அது நிறைவேற்றப்பட்டவில்லை.  இந்திய, இலங்கை ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும்.  

தொடர்ச்சியாக இந்த முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வந்தது மாத்திரமல்ல பல கருமங்களை நிறைவேற்றுவதற்கு இந்தியா காரணமாக இருந்துள்ளது  என்று இந்தியப் பிரதமரிடம் எடுத்துக்கூறினேன். அத்துடன் மோடி பிரதமராக வந்தபிறகு 2014ஆம் ஆண்டு நாங்கள்  அரசியல் தீர்வு தொடர்பில் அவரை சந்தித்து பேச்சு நடத்தியதை நினைவுபடுத்தினேன்.  இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருகை தந்த இரண்டு சந்தர்ப்பங்களையும்  அவருக்கு நினைவூட்டினேன்.  எனினும்  புதிய அரசாங்கம் பதவியேற்றபின்னர்  அரசியல் சாசனத்தை   உருவாக்குவதற்கு சில கருமங்கள்  நடைபெற்று வந்தன.  எனவே  அதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தோம்.   அதனால்தான்  உங்களுக்கு அதிகம் சிரமம் தரவில்லை என்று மோடியிடம் எடுத்துக்கூறினேன்.  

எனினும்  அந்தக்கருமங்கள்  நடைபெறவேண்டியது அவசியம் என்று  நான் கூறினேன். அப்போது அவர் எங்களுக்கு நீங்கள்    சிரமம் தருவதாக நினைக்கவேண்டாம்.   எங்கள் அயல்நாட்டில் அமைதி, சமாதானம் நிலவுவதை நாங்கள் விரும்புகின்றோம்.  அது நாங்கள் கரிசனைகொள்ளும் விடயம்.  அக்கறையாக இருக்கின்றோம். இலங்கையில்  மீண்டும் மோதல் உருவாவதை  நாங்கள் விரும்பவில்லை. எனவே இந்த தேசிய பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வைக் காணவேண்டும் என்பதில் எங்களுக்கு அக்கறை உண்டு.   எனவே   எங்களை  சிரமப்படுத்துவதாக நீங்கள் நினைக்கவேண்டாம். எங்கள் பணியை   ஆற்றுவதற்கு  நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று என்னிடம் கூறினார். 

ஒரு திருப்திகரமான நிலைப்பாட்டை நாங்கள் அவரிடம் கண்டோம்.  இந்தியா எங்கள் விடயத்தில் அக்கறையாக இருக்கின்றது.   இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்  என்பதில் உறுதியாக இருக்கின்றது.  பலர் உள்ளடக்கிய குழுவே அவரை சந்தித்தது. வேறு  பலரும் வெவ்வேறு கருத்துக்களை கூறினார்கள்.  இது   திருப்திகரமான சந்திப்பு என்று நான் கூறுகின்றேன்.  அதன் பின்னர்  அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரையும் சபாநாயகரையும் சந்தித்து இந்த விடயம் குறித்து பேசினோம்.  

கேள்வி: தீர்வு விடயத்தில்  இந்தியாவின் போக்கு உங்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறதா?

பதில்:  இந்தியா இந்த விடயத்தில் அக்கறையாக இருக்கிறது. பிரதமர்  நரேந்திரமோடி இலங்கைக்கு வந்தபோது பாராளுமன்றத்தில்  உரை நிகழ்த்தினார். அந்த உரையை நிகழ்த்தியபோது  நாட்டில் சமாதானம் ஏற்படுவதற்கு என்ன செய்யவேண்டும் என்றும்  அதிகாரத்தை பகிரவேண்டும் என்றும்  எல்லா மக்களையும் உள்வாங்கவேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். எப்படியும்  ஒரு நியாயமான ஒரு நிரந்தரமான தீர்வு ஏற்படவேண்டும் என்பதில்   அக்கறையாக இருக்கின்றது. 

கேள்வி: அதனை இந்த விஜயத்தில் நீங்கள் உணர்ந்துகொண்டீர்களா?

பதில்:  அது முன்னரும் அவ்வாறுதான் இருந்தது.  இந்த விஜயத்தின் போது  அதனை மேலும்  உறுதிப்படுத்திக்கொண்டோம். 

கேள்வி: அரசியலமைப்பை புதிதாக கொண்டுவருவதற்கு  இந்தியாவின்  ஒத்துழைப்பு  அழுத்தம்  தேவை என்று   நீங்கள் கேட்டுள்ளீர்கள், ஆனால்  இலங்கையில் இது குறித்த நிலைமை மோசமாகத்தானே இருக்கின்றது.  அரசியலமைப்பு கூட வருமா என்ற சந்தேகம் நிலவுகிறதே?

பதில்: அதனை நான் தற்போது விபரிக்க முடியாது.  இலங்கையில்  அரசியல் தீர்வு  ஏற்படவேண்டுமென்று   சிந்திக்கின்றவர்கள் இல்லாமல் இல்லை.  சில கடும்போக்குவாதிகள்  அரசியல் தீர்வுக்கு எதிராக  தங்களுடைய கருத்தை  உரத்தகுரலில் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.    இந்தியாவின் கருத்துக்களை  இந்த விடயத்தில் உதாசீனம் செய்ய முடியாது.   

கேள்வி: அப்படியானால் எதிர்காலத்தில் இந்தியப் பிரதமருக்கு   அதிக சிரமம் கொடுக்க முடியுமா? 

பதில்:  அப்படிநான் சொல்லமாட்டேன்.  ஆனால்  நாங்கள் ஒற்றுமையாக இந்த கருமத்தை  முன்னெடுக்க விரும்புகின்றோம். எல்லோருடைய ஒத்துழைப்பும்  அவசியம் அவ்வாறு  ஒரு  அரசியல் தீர்வு வருவதே சிறந்தாக இருக்கும்.  அது எல்லோருக்கும் ஏற்புடையதீர்வாக இருக்கவேண்டும்.   இந்தியா இந்த விடயத்தில்  அக்கறையீனமாக இருக்கும் என்று நான் நம்பவில்லை.   

கேள்வி: பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு தொடர்பாக பேசப்பட்டதா?

பதில்: அது தொடர்பில் பேசப்பட்டது. பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம்,  உள்ளிட்ட அபிவிருத்தி விடயங்கள் குறித்து பேசப்பட்டது. 

கேள்வி: இதன்போது ஏதாவது முரண்பாடான விடயங்கள் வெளிவந்ததா?

பதில்: அப்படி ஒன்றும் வந்ததாக தெரியவில்லை. 

கேள்வி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடான சந்திப்பில்   நீங்கள் இலங்கை பௌத்த நாடு என்பதை  ஏற்றுக்கொள்வதாக கூறியதாக  விமர்சனங்கள் வருகின்றனவே?

பதில்: சமயம் தொடர்பாக அங்கு பேசப்படவில்லை.  சமயத்தைப் பற்றி எதுவும் பேசப்படவில்லை.  அந்த விடயம் பேச்சுக்குவரவேயில்லை.  அரசியல் சாசனத்தைப் பொறுத்தவரையில்   அரசியல் தீர்வானது    இந்திய இலங்கை  ஒப்பந்தத்தின் அடிப்படையில்  அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை  உள்ளடக்கி  ஓர் அரசியல் தீர்வு வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.  

கேள்வி: 2015ஆம் ஆண்டிலிருந்து ஒரு நியாயமான  தீர்வுத்திட்டத்தைப் பெற நீங்கள் அதிகம் தியாகம் செய்து வருகின்றீர்கள்? உங்களுக்கு எதிராக விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன. எனவே இந்த பயணம்  ஒரு தீர்வுத்திட்டத்துடன் வெற்றிபெறும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?

பதில்:  வெற்றிபெறவேண்டும் என்ற அடிப்படையில்தான் நாங்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். எங்களுடைய பங்களிப்பை முழுமையாக செய்யவேண்டியது எமது கடமை.  எங்களுடைய பங்களிப்பை நாங்கள் செய்யாத காரணத்தினால்   இந்த செயற்பாடு பிழைத்தது என்ற  பெயர் வந்துவிடக்கூடாது.  

கேள்வி:  2015ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற தீர்வு முயற்சிகளுக்கும் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெறும் தீர்வு முயற்சிகளுக்குமிடையிலான வித்தியாசத்தை எவ்வாறு காண்கின்றீர்கள்?

பதில்:  இப்போது அரசியல் ரீதியாக  ஆட்சியில்   உள்ள அரசாங்கம் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருப்பதாக  நாங்கள் கருதுகின்றோம்.  இதற்கு முன்னரிருந்த அரசாங்கத்தில் அவ்விதமான ஒரு நம்பிக்கை இருந்ததாக நாங்கள் கூற முடியாது.  

கேள்வி: இந்தியாவில் நீங்கள் மோடியை சந்தித்த மறுதினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை  மோடிசந்தித்திருந்தார்.  இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: மஹிந்த ராஜபக்ஷவை  இந்தியப் பிரதமர்  சந்தித்திருந்தார். இந்திய அரசியல்  தலைவர் ஒருவர் மஹிந்தவை அங்கு அழைத்திருந்தார்.  மஹிந்த அங்கு சென்று ஒரு உரையும் நிகழ்த்தியிருந்தார்.  அந்த  விஜயத்தை நாங்கள் எங்களுக்கு முரண்பாடான விஜயமாக பார்க்கவில்லை. இரண்டு கருமங்களும் ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளன.   மஹிந்த  இந்தியா சென்றதால்  மோடியை சந்தித்திருக்கின்றார். 

கேள்வி: இதனூடாக  ஏதாவது சமிக்ஞைகள்  விடுக்கப்பட்டிருக்குமா? 

பதில்: நாம் கற்பனையில் பேசுவது சரியல்ல. 

கேள்வி:  மாகாணசபைத் தேர்தல் தாமதமாகிச் செல்கின்றது.   எந்தமுறையில் தேர்தல் நடத்தப்படவேண்டுமென்று நீங்கள் விரும்புகின்றீர்கள்?

பதில்:  தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில்  மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதாக இருந்தால்  அது பழைய முறைமையில்தான் நடக்கவேண்டும்.  மாகாணசபைத் தேர்தலை   விரைவாக  நடத்தவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.  தொகுதிகளை நிர்ணயித்து தேர்தலை  புதிய முறைமையில்  விரைவில் நடத்துவது கடினம். 

கேள்வி: வடமாகாணசபை பதவிக்காலம் சில தினங்களில்  நிறைவடைகின்றது.  அந்தத் தேர்தலுக்கு  கூட்டமைப்பு தயாராகி வருகின்றதா?

பதில்:  வடமாகாணசபை   பதவிக்காலம்  முடிவுக்கு வந்தாலும் தேர்தல்  நடைபெற  இன்னும் சில மாதங்கள்  கடக்கும் என நாம் நினைக்கின்றோம்.  ஏற்கனவே காலம் முடிவடைந்த    மாகாணசபைகளுக்கும் இன்னும்  தேர்தல் நடைபெறவில்லை. உதாரணமாக கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளை கூறலாம்.  எப்படியிருப்பினும் இந்த விடயங்களை நாங்கள் கவனத்தில் எடுத்து  செயற்படுகின்றோம்.  

கேள்வி: வடமாகாணசபையின்  முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்தீர்களா?

பதில்: அந்த விடயம் தொடர்பில் நாங்கள் இன்னும் சிந்திக்கவில்லை.  அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து  நாங்கள் முடிவெடுப்போம்.   முடிவு எடுக்கவேண்டிய காலகட்டத்தில் முடிவெடுப்போம். 

கேள்வி: தற்போது பதவியிலிருக்கும் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை மீண்டும் களமிறக்கும் எண்ணமிருக்கின்றதா?

பதில்: அது தொடர்பில் நாங்கள் இன்னும் சிந்திக்கவில்லை.  அது தொடர்பில் எவ்விதமான முடிவுகளும் இன்னும் எடுக்கப்படவில்லை.  நாங்கள் உரிய நேரத்தில் எங்களுடைய கட்சிக்குள் ஆராய்ந்து எல்லோருடைய கருத்துக்களையும் அறிந்து உரிய முடிவுகளை எடுப்போம். 

கேள்வி:  அண்மையில்  வடமாகாண முதலமைச்சர்   எதிர்வரும் தேர்தல் தொடர்பில் நான்கு தெரிவுகள் குறித்து வெளிப்படுத்தியிருந்தார்.  அந்த நான்கு தெரிவுகளிலும்  கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதற்கான தெரிவு இல்லையே  

பதில்:  அதுதொடர்பில் நான் பேசவிரும்பவில்லை.   அவருடைய தெரிவுகளைப் பற்றி அவர் பேசலாம்.    அந்த விடயங்கள் தொடர்பில் தேசிய கூட்டமைப்பு  உரிய நேரத்தில் முடிவெடுக்கும். 

கேள்வி: வடக்கு முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இருக்கின்றதா?

பதில்:  நான் அவருடன் இப்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றேன்.  

கேள்வி:  உங்களுக்கும்   வடக்கு முதல்வருக்குமிடையில் முரண்பாடுகள் இருப்பது  அனைவரும் அறிந்த உண்மை.  அதற்காக ஏதாவது  பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?

பதில்: பேசவேண்டியிருந்தால் நாங்கள் பேசுவோம். 

கேள்வி: கடந்த ஐந்து வருடகாலத்தில்  வடமாகாணசபையில்  செயற்பாடுகள் தொடர்பில்  உங்களின் மதிப்பீடு எவ்வாறு  உள்ளது?

பதில்: இது தொடர்பில்  ஒரு பொதுவான அபிப்பிராயம் உள்ளது. அதாவது   இன்னும் கூடுதலான  கருமங்களை  அங்கு நிறைவேற்றியிருக்கலாம் என்ற ஒரு அபிப்பிராயம்   காணப்படுகின்றது. 

கேள்வி:  அது தொடர்பில் நீங்கள் கவலை அடைகின்றீர்களா?

பதில்: இன்னும் கூடுதலான கருமங்கள் நடைபெற்றால்   அது எங்களுக்கு சந்தோஷத்தை தந்திருக்கும். 

கேள்வி:  பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  உங்களை   தவறாக வழிநடத்துவதாகவும்  அவர் கூறுவதை கேட்டுக்கொண்டு  செயற்படுவதாகவும் வடக்கு முதல்வர் பல சந்தர்ப்பங்களில் குற்றம்சாட்டியிருக்கின்றார்.  இதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: ஒருவரும் என்னை வழிநடத்தவில்லை.  கட்சிக்குள்   பேச்சுவார்த்தை நடத்தி சில முடிவுகளை நாங்கள் எடுக்கின்றோம். தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற அடிப்படையில் ஏனைய கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கின்றோம்.  என்னுடைய அரசியல் வாழ்க்கையில்  ஒருவரும் என்னை வழிநடத்தவில்லை. 

கேள்வி: வடக்கு முதல்வர்  அடுத்தமுறையும்  கூட்டமைப்பில் போட்டியிட  விருப்பம் தெரிவித்தால்  நீங்கள் அதுதொடர்பில் பரிசீலிப்பீர்களா?

பதில்: இந்த விடயங்கள் அனைத்தும் தொடர்பாக கட்சி கூடி ஆராய்ந்து முடிவெடுக்கும். 

கேள்வி: இராணுவத்தினரை  யுத்தக்குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாறு  ஐ.நா. விற்கு யோசனை முன்வைக்க போவதாக  ஜனாதிபதி கூறியிருக்கின்றார்? அதேபோன்று  தடுப்பில் உள்ள புலிகளையும் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ உறுப்பினர்களையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கின்றார். இது தொடர்பில்   உங்களிடமும் கோரிக்கை வைக்கவுள்ளதாக  கூறியிருக்கின்றார்.   அது தொடர்பில் உங்களின் கருத்து?

பதில்:  அது தொடர்பில் நாங்கள் சிந்திக்கவேண்டும்.   எல்லாவற்றையும் ஒரே விதமாக பார்க்க முடியாது.   சிலரின் குற்றங்கள்  அவர்களின்  அரசியல் உரிமையுடன் சம்பந்தப்பட்டுள்ளன.  படைத்தரப்பை பொறுத்தவரையில் அவர்கள் இழைத்ததாக கூறப்படும்  குற்றங்கள் சர்வதேச  மனித  உரிமை மீறல்கள்   சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள்   சம்பந்தமானவையாகும்.    இந்த இரண்டு விதமான குற்றங்களையும்   ஒரே அடிப்படையில் பார்வையிடுவதை ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமாக நான் கருதவில்லை.  ஆனால் இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் சிந்திக்கவேண்டும்.  

கேள்வி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றதா?

பதில்: நிச்சயமாக நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.   

கேள்வி: ஏன்  அரசாங்கத்தரப்பு  இப்படி ஒரு யோசனையை முன்வைக்கின்றது.  

பதில்: அவர்கள் தங்களுடைய நெருக்கடிகளிலிருந்து தங்களை மீட்டுக்கொள்வதற்காக இவ்விதமான கருத்துக்களை முன்வைக்கலாம்.  

கேள்வி: 2016ஆம் ஆண்டு முடிவதற்குள்  ஒரு தீர்வைப் பெற முடியும் என  நீங்கள்  தெரிவித்திருந்தீர்கள்? ஆனால் அது அவ்வாறு நடக்கவில்லை? எனவே 2020க்குள் தீர்வைப் பெற முடியும் என்ற  நம்பிக்கை   உங்களுக்கு இருக்கிறதா?

பதில்: நாங்கள்  2015ஆம் ஆண்டு  அரசாங்கம் உருவாகிய பின்னர்   அரசியல் தீர்வு சம்பந்தமான  செயற்பாடுகள் விரைவில் நகரும் என்று எதிர்பார்த்தோம்.   அந்தக்கருமத்தில் எல்லோரையும்  ஊக்குவிக்கவேண்டும் என்பதற்காக    இந்த கருத்தை  முன்வைத்தோம்.  ஆனால்  சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.  எல்லோரும் அந்த கருமத்தில் ஒத்துழைக்காததால்   அது அவ்வாறு உள்ளது.  அதற்காக  அதனை நாங்கள் கைவிடப்போவதில்லை.   எங்களுடைய ஊக்கம் குறையப்போவதில்லை.  எங்களுடைய கடமை தொடரும்.  முயற்சி தொடரும்.   

கேள்வி: தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர்  மீதான நம்பிக்கை  குறைந்துவிட்டதா?

பதில்:  அவர்கள்   இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்பதிலிருந்து   இன்னும் விலகவில்லை.  அவர்களை   விலகாமல் இருக்க வைப்பது எங்களது கடமைகளில் ஒன்றாகும்.   

கேள்வி: நீங்கள்  ஒரு தீர்வுக்காக  பல தசாப்தங்களாக போராடிக்கொண்டிருக்கின்றீர்கள்.  இவ்வளவு கஷ்டப்பட்டும்  தீர்வு கிட்டவில்லையே என்ற சலிப்பு ஏற்பட்டுவிட்டதா?

பதில்: எங்களுடைய கடமையை நாங்கள் செய்கின்றோம். இயன்றளவு செய்வோம்.   மக்களுக்கு ஆற்றவேண்டிய  கடமையை  நிறைவேற்றுவதற்காக  நாங்கள் சில கருமங்களில்  ஈடுபட்டுள்ளோம். எங்களால் இயன்றளவு  செய்வோம்.  அவ்வளவுதான். 

கேள்வி: 2001ஆம் ஆண்டு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து பிளவுகள் இருக்கவில்லை. எனினும் 2015ஆம் ஆண்டின் பின்னர் கூட்டமைப்பிற்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டு வருகின்றன.  இதற்கு என்ன காரணம்?

பதில்:  பிளவு வந்திருக்கவேண்டிய  அவசியம் இல்லை. அவற்றை தவிர்த்திருக்கலாம். ஆனால்  சிலர் பிளவுபட விரும்பினால்  அதனை நாங்கள் தடுக்க முடியாது.   பிளவை நாங்கள் ஏற்படுத்தவில்லை. சிலர் தாங்களாக விலகிக்கொண்டுள்ளனர்.  இதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.  

கேள்வி: அப்படியாயின்  அடுத்த மாகாணசபைத் தேர்தலிலும்   கூட்டமைப்பு பிளவுடன்தான்  போட்டியிடுமா?

பதில்: அப்படிநான் நினைக்கவில்லை.   பார்ப்போம்.  

கேள்வி: கடந்த ஜனாதிபதி தேர்தலில்  கூட்டமைப்பின் பங்களிப்பு முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது.  உங்களின் பார்வையில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் எப்படி இருக்கும்?

பதில்: தேர்தல் எப்படி நடைபெறும் யார் போட்டியிடுவார்கள் என்ற  விபரங்கள் ஒன்றும் இதுவரை  தெளிவாக  தெரியவரவில்லை. ஆனால் தமிழ் மக்கள்  தங்கள் பலத்துடைய பலாபலன்களைப் பெறுவதற்காக   ஒருமித்து ஒற்றுமையாக நிற்கவேண்டும்.  

அது அத்தியாவசியமாகும்.   ஒற்றுமையீனம் ஏற்பட்டால்  அதனுடைய விளைவு தமிழ் மக்கள்  பலவீனப்படுவதாகும். அவர்களுடைய போராட்டம் பலவீனமாகும். அவர்களுடைய போராட்டத்திலுள்ள நியாயத்தன்மை பலவீனமடையும்.  இதனை எல்லோரும் தவிர்க்கவேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக நிற்கவேண்டும்.  இன்று எமது கையில் உள்ள ஒரே ஒரு ஆயுதம் ஒற்றுமையாகும். அதுதான் எங்களுடைய பலம்.  தமிழ் மக்களுக்கு  ஏற்புடைய ஒரு தீர்வை  நாங்கள்   உருவாக்குவதற்கு  கடைசிவரை முயற்சிப்போம்.   தீர்வை ஏற்றுக்கொள்வதற்கு முன்பதாக நாங்கள் எங்களுடைய மக்களின் கருத்துக்களை அறிவோம்.   இறுதி வடிவம் வந்தபிறகு மக்களுடன் கலந்துரையாடுவோம். 

நேர்கண்டவர் - ரொபட் அன்டனி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22