அமெரிக்காவின் பிரதி சட்டமா அதிபர் ரொட் ஜே ரொசென்ஸ்டெய்ன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை பதவி விலகுக்குவது குறித்தும் டிரம்புடனான உரையாடல்களை இரகசியமாக பதிவு செய்வது குறித்தும் ஆராய்ந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரம்ப் நிர்வாகத்தில் காணப்படுகின்ற குழப்பங்களை  வெளிப்படுத்துவதற்காக பிரதி சட்டமா அதிபர் டிரம்புடனான உரையாடல்களை இரகசியமாக பதிவு செய்வது குறித்து சிந்தித்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் டிரம்பை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக அரசமைப்பின 25 வது திருத்தத்தை பயன்படுத்துவது குறித்தும் பிரதி சட்டமா அதிபர் சிந்தித்தார் எனவும் நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

2017 இல் எவ்பிஐ இயக்குநரை டிரம்ப் பதவியிலிருந்து நீக்கியதை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் குழப்பநிலை ஏற்பட்டவேளையே பிரதி சட்டமா அதிபர் இது குறித்து ஆராய்ந்துள்ளார்.

நீதித்திணைக்கள அதிகாரிகள் மற்றும் எவ்பிஐ அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே பிரதி சட்டமா அதிபர் டிரம்பிற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

எனினும் பிரதி சட்டமா அதிபர் இதனை நிராகரித்துள்ளார்.

நியுயோர்க் டைம்ஸ் செய்தி பிழையானது தவறான விபரங்களை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இனந்தெரியாத தகவல்களை அடிப்படையாக வைத்து வெளியான தகவல்கள் குறித்து நான் மேலும் கருத்து கூற விரும்பவில்லை என தெரிவித்துள்ள அவர் தங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக  இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

அரசமைப்பின் 25 வது திருத்தத்தை டிரம்பிற்கு எதிராக பயன்படுத்துவதற்கான தேவையெதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.