ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை குறித்து அணித் தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.போட்டிகளுக்கான அட்டவணை சில மாதங்களுக்கு முன்னர் வெயிடப்பட்டபோது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அதிருப்தி வெளியிட்டிருந்தது.. 

அடுத்தடுத்த நாட்களில் இரண்டு போட்டிகளில் விளையாடுவது சிரமம் என இந்தியா தெரிவித்திருந்தது.

இப்போது சுப்பர் நான்கு போட்டிகள் தமக்கு பெரும் சிரமத்தைக் கொடுப்பதாக பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணித் தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

‘‘முன்னோடி சுற்று நிறைவடைவதற்கு முன்னரே எம்மை இரண்டாம் அணி என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தமை எமக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் தருகின்றது’’ என்றார் பங்களாதேஷ் அணி்த் தலைவர் மஷ்ராபே மோர்ட்டாஸா தெரிவித்தார்.

‘‘நாங்கள் ஒரு திட்டத்துடன் இங்கு வந்தோம். இதன் காரணமாக அபுதாபியிலும் துபாயிலும் அடுத்த நாட்களில் விளையாட வேண்டியுள்ளது. இது எமக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. 

இது ஒரு சர்வதேச போட்டி நாங்கள் எமது தேசத்திற்காக விளையாடுகின்றோம். எந்தப் போட்டியானால் நியதிகள் இருக்கின்றன. ஆனால் நியதிக்கு அப்பால் செல்வதுதான் ஏமாற்றத்தைத் தருகின்றது’’ என அவர் மேலும் கூறினார்.

இது போன்றே அதிருப்தியை வெளியிட்ட பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹ்மத், போட்டி அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டுள்ளது என குறைகூறினார்.

‘‘இந்த அட்டவணை நிச்சயமாக அதிருப்தியைத் தருகின்றது. இந்தியா தோல்வி (முன்னோடி சுற்றில்) அடைந்தாலும் துபாயிலேயே நிலைத்திருக்கும். பயணம் செய்வது (துபாயிலிருந்து அபுதாபிக்கும் அபுதாபியிலிருந்து துபாய்க்கும்) என்பது சிரமமானது. போட்டிகள் நடைபெறும்போது ஒன்றரை மணி நேரம் பயணிப்பது சிரமமாகும். அது இந்தியாவாக இருக்கட்டும், பாகிஸ்தானாக இருக்கட்டும், அல்லது வேறு எந்த நாடாக இருக்கட்டும். எல்லோருக்கும் ஒரே நியதி இருக்கவேண்டும்’’ என சர்ப்ராஸ் அஹ்மத் தெரிவித்தார்.பங்களாதேஷ் அணி நேற்றுமுன்தினம் அபுதாபியில் விளையாடிவிட்டு நள்ளிரவு அங்கிருந்து புறப்பட்ட விடியற்காலை ஒன்றரை மணி அளவில் துபாயை அடைந்தது. தொடர்ந்து 14 மணித்தியாலங்களில் இந்தியாவை எதிர்த்தாடியது.