ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் இரண்டாவது போட்டியின் இமாம், பாபர் அசாம் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் மலிக்கின் அதிரடி ஆட்டத்தினாலும் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுக்களினால் வெற்றியையீட்டியது.

அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டின‍ை  இழந்து 257 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது.

ஆப்கான் அணி சார்பில் ஷஹதி 97 ஓட்டத்தையும் அஸ்கர் ஆப்கான் 67 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர். 

258 என்ற வெற்றியிலக்க‍ை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி சார்பில் பகர் ஜமான், இமாம்-உல்-ஹக் முதலில் துடுப்பெடுத்தாட களம் புகுந்தனர்.

இதில் இமாம் எதிர்கொண்ட முதல் ஓவரிலேயே எதுவித ஓட்டமும் இன்றி டக்கவுட் முறையில் முஜீபுர் ரஹ்மானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு வேதனை அளித்தார். எனினும் இவரின் வெளியேற்றத்தை அடுத்து களம்புகுந்த பாபர் அசாம் ஜமாமுடன் ஜோடி சேர்ந்தாட ரசிகர்கள் மனதில் இருந்த வேதனை துடைத்தெறியப்பட்டது.

அதற்கிணங்க ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சுகளை மிகவும் துல்லியமாக எதிர்கொண்ட இவர்கள் நான்கு திசைகளிலும் பந்தை அடித்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை வலுவடைந்தது.

இவர்கள் இருவரதும் ஜோடி 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டவேளை அணியின் இரண்டாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. அதன்படி இமாம் அநாவசியமான முறையில் 80 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அவருக்கு தோள் கொடுத்தாடி வந்த பாபர் அசாமும் 35.1 ஓவரில் 66 ஓட்டத்துடன் ரஷித் கானுடைய சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.

அதன்படி பாகிஸ்தான் அணி 158 ஓட்டத்துக்கு மூன்று விக்கெட்டினை இழந்தது. இதனையடடுத்து ஜோடி சேர்ந்தாடி வந்த ஹரிஸ் சோஹைல், மலிக் அணியின் ஓட்ட எண்ணிக்கை சீரான கதியில் கொண்டு வந்தனர். 

எனினும்  41.1 ஆவது ஓவரில் ஹரிஸ் சோஹைல் முஜிபுர் ரஹ்மானின் பந்தினை எதிர்கொண்டு 13 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 42.2 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை எடுத்தது. 

இதனைத் தொடர்ந்து ஆட்டம் சூடுபிடிக்க 44.6 ஆவது ஓவரில் பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் 8 ஓட்டத்துடனும் இவரையடுத்து அஸீப் அலி 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

அதற்கிணங்க 47 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டத்தை பெற்றுக் கொள்ள, பாகிஸ்தான் அணி வெற்றி பெற 18 பந்துகளுக்கு 29 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. 

மலிக் அடித்தாட ஆரம்பிக்க அரங்கில் பாகிஸ்தான் ரசிகர்களின் குரல் ஓங்க அந்த குரலை ரஷித் கான் தனது சுழல் புயல் மூலம் மொஹமட் நவாஷை போல்ட் முறையில் ஆட்டமிழக்க செய்ய பாகிஸ்தான் ரசிகர்களின் ஆரவாரம் சற்று நேரம் மெளனித்தது. எனினும் அவருக்கு அடுத்தபடியாக ஆடுகளம் புகுந்த ஹசன் அலி எதிர்கொண்ட முதல் பந்தையே 6 ஓட்டமாக மாற்றிக் காட்டினார்.

இறுதி ஓவருக்கு 11 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இருக்க மலிக் 1 ஆறு ஓட்டத்தையும் 1 நான்கு ஓட்டத்தையும் விளாசி 49.3 ஓவரில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த வெற்றியிலக்கை பூர்த்தி செய்து போட்டியை முடித்து வைத்தார்.

அதன்படி மலிக் 51 ஓட்டத்துடனும், ஹசன் அலி 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டடுக்களையும், முஜிபுர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களையும் நைய்ப் ஒரு விக்கெட்டினையு வீழ்த்தினர்.

போட்டியில் அதிக 6 ஓட்டங்களை விளாசிய வீரராக ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஆப்கான் தெரிவு செய்யப்பட்டதுடன் போட்டியின் ஆட்டநாயகனாக 43 பந்துகளில் 51 ஓட்டங்களை விளாசிய மலிக் தெரவுசெய்யப்பட்டார்.