பங்களாதேஷ் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா காட்டிய வான வேடிக்கையின் காரணமாக இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் அசத்தலாக வெற்றயீட்டியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களமிறங்குமாறு பங்களாதேஷ் அணியை பணித்தது, இதன்படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி இந்திய அணியின் பந்து வீச்சுக்களில் திக்குமுக்காடி 49.1 ஓவர்கள‍ை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் மெய்டி ஹசான் 42 ஓட்டத்தையும் மொஸ்ராபி மோர்டாசா 26 ஓட்டத்தையும் மாமதுல்லா 25 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

174 என்ற இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி இந்திய அணி சார்பாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தாவன் நல்லதொரு ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களுக்கு 61 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள 16.2 ஓவருக்கு முதல் விக்கெட்டினை பறிகொடுத்தது. அதன்படி தவான் 47 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டம் அடங்லாக  40 ஓட்டங்களுடன்  ஷகிப் அல் ஹசனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து ராயுடு களமிறங்கி ரோஹித்துடன் கைகோர்த்தாட ரோஹித் சர்மா வழமைப் போன்று பந்துகளால் வான வேடிக்கை காட்டி வர அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக  அதிகரித்தது.

44 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வந்த ரோஹித் சர்மா 22.3 ஆவது ஓவரில் 1 ஆறு ஒட்டத்தை தூக்கிப்போட இந்திய அணி 100 ஓட்டங்களை கடந்ததுடன் ரோஹித் சர்மா தனது 36 ஆவது அரைசதத்தை பதிவு செய்தார்.

அதற்கடுத்து அம்பத்தி ராயுடு 13 ஒட்டத்துடன் ரூபல் ஹுசேனின் பந்து வீச்சினை எதிர்கொண்டு ஆட்டமிந்து களம் விட்டு நீங்க தோனி களம் புகுந்தாடி வர இந்திய அணி 30 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டின இழந்து 142 ஓட்டங்களை பெற்றுது.

ரோஹித் சர்மா 74 ஒட்டத்துடனும் தோனி 14 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். 31.2 ஓவரில் தோனி 1 நான்கு ஓட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஆக மாறியது. எனினும் 35.3 ஆவது ஓவரில் தோனி 33 ஓட்டத்துடன் மோர்டாசாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதையடுத்து தினேஷ் கார்த்திக் களமிறங்கி ஆடிவர இந்திய அணி 36.2 ஓவர்களில் பங்களாதேஷ் நிர்ணயித்த 174 ஓட்டங்களை பெற்று, 7 விக்கெட்டுக்களினால் வெற்றியை பதிவு செய்தது.

அதற்கிணங்க அணித் தலைவர் ரோஹித் சர்மா 5 நான்கு ஓட்டம் 3 ஆறு ஒட்டம் அடங்கலாக 83 ஓட்டத்துடனும், தினேஷ் கார்த்திக் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் பங்களாதேஷ் சார்பில் ஷகிப் அல் ஹசன், ரூபல் ஹுசேன் மற்றும் மோர்டாசா தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். 

போட்டியில் அதிக 6 ஒட்டங்களை விளாசிய வீரராக ரோஹித் சர்மாவும் போட்டியின் சிறப்பாட்டக்காரராக 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள 'சுப்பர் -4' சுற்றின் மூன்று, நான்காவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியையும் (துபாய்), ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணியையும் (அபுதாபி) எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.