இயக்குநர் ஹரி அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் இணைகிறார்.இயக்குநர் ஹரி சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இது குறித்து இயக்குநர் ஹரி பேசுகையில்,‘ 

விக்ரம் நடிப்பில் தயாரான சாமி ஸ்கொயர் படம் ரசிகர்களின் ஆதரவுடன் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருக்கிறது. 

அடுத்ததாக சூர்யாவை இயக்கவிருக்கிறேன். இதனை சூர்யாவும் உறுதி செய்திருக்கிறார். சிங்கம் படத்தின் தொடர்ச்சியான கதையாக அல்லாமல், வேல் படத்தைப் போல் குடும்பம், சென்டிமெண்ட், ஆக்சன் கலந்த கதையாக உருவாகவிருக்கிறது. இதைப் பற்றிய ஏனைய விவரங்கள் விரைவில் வெளியாகும்.’ என்றார் இயக்குநர் ஹரி.

சூர்யா தற்போது செல்வராகவனின் இயக்கத்தில் என் ஜி கே என்ற படத்திலும், கே வி ஆனந்த் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த படங்களின் பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் ஹரியின் இயக்கத்தில் அடுத்த ஆண்டில் சூர்யா நடிப்பார் என்கிறார்கள் திரையுலகினர்.