14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா வீழ்த்திய நான்கு விக்கெட்டுக்களின் துணையுடன் இந்திய அணி பங்களாதேஷ் அணியை 173 ஓட்டத்துக்குள் கட்டுப்படுத்தியது.

அதன்படி நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களமிறங்கி ஆடுமாறு மொஷ்ரபி மோர்டாசாவை பணித்தார்.

அதற்கிணங்க முதலாவதாக துடுப்பெடுத்தாட பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டான் தாஸ், ஹுசைன் ஷான்டோ ஆகியோர் களமிறங்கி ஆடிவர 4.3 ஆவது ஓவரில் பங்களாதேஷுக்கு இராகுகாலம் ஆரம்பித்தது.

அதன்படி 4.3 ஆவது ஓவரில் லிட்டான் தாஸ் ஏழு ஓட்டத்துடன் புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சில் கேத்தர் யதவ்விடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அவருடன் இணைந்து களறிங்கிய ஹுசைன் ஷான்டோ 7 ஓட்டத்துடன் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழத் தொடங்கியது.

ஷகிப் அல் ஹசன், ஜடேஜாவின் முதல் ஓவரில் 2 நான்கு ஓட்டங்களை பெற்றுக் கொண்டு 17 ஓட்டத்துடனும், மொஹமட் மிதுன் 9 ஓட்டத்துடன் ஓரளவு நிதானமாக ஆடி வந்த ரஹிம் 21 ஓட்டத்துடனும் ஜடேஜாவின் பந்து வீச்சினை எதிர்கொண்டு ஆட்டமிழந்தனர்.

இதனால் பங்களாதேஷ் அணி 17 ஆவது ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து  65 ஓட்டங்களை பெற்று தடுமாறி வந்தது.

இதையடுத்து மாமதுல்லாவும், மொசாடெக் ஹுசேனும் ஜோடி சேர்ந்து ஆடிவர பங்களாதேஷ் அணி 30 ஓவருக்கு 90 ஓட்டத்தை பெற்றது. மாமதுல்லா 17 ஓட்டத்தையும் ஹுசேன் 9 ஓட்டத்துடனும் நிதானமாக ஆடி வர 32 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றுக் கொண்டது.

அதைத் தொடர்ந்து  மாமதுல்லா 25 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அவருடன் இணைந்து ஆடி வந்த ஹுசேனும் 12 ஓட்டத்துடன் ஜடேஜாவின் சுழலில் சிக்கி தோனியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

44.3 ஆவது ஓவரில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டத்தை பெற்று துடுப்பெடுத்தாடி வந்தது. ஆடுகளத்தில் அணித் தலைவர் மொஷ்ரபி மோர்டாசாவும் மெய்டி ஹசானும் ஜோடி சேர்ந்து ஆடிவர 46.3 ஆவது ஓவரில் புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சில் மோர்டாசா 26 ஓட்டத்துடனும், மெய்டி ஹசான் பும்ராவின் பந்து வீச்சில் தவானிடம் பிடிகொடுத்து 42 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக பங்களாதேஷ் அணி 49.1 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 174 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டுக்களையும், புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா தலா மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.