முசலி பிரதேச செயலருக்கு எதிராக முசலி பிரதேசச் செயலகத்திற்கு முன் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம் பெறவலிருந்த  ஆர்ப்பாட்டம் ஒன்று சிலாபத்துறை பொலிஸாரினால் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளுவதற்காக முசலி  பிரதேசச்  செயலகத்திற்கு முன் மக்கள் இன்று காலை ஒன்று கூடுவதை அவதானித்த பொலிஸார் விரைந்து சென்று அங்கு ஒன்று கூடுபவர்களை உடனடியாக கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை அழைத்து பொலிஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன் போது ஆர்ப்பட்டங்கள் செய்வதற்கு முன் சுமார் மூன்று நாட்களுக்கு முன்னதாக  பிரதேச பொலிஸ் நிலையத்தில் முறையான அனுமதியினைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால்  இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக எந்த அனுமதியினையும் எவரும் பெறவில்லை. இதன் காரணமாக குறித்த ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் பிரகாரம் கைது செய்ய முடியும். எனவே முறையான அனுமதியினை பெற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தவர்கள் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் முசலி பிரதேசச் செயலாளருக்கு அச்சுரூத்தல் விடுத்த நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கிராம அலுவலகரின் ஆதரவாளர்கள் என தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.