(ஆர்.யசி)

மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக் குழு இனப்பிரச்சினைத் தீர்வுகள் குறித்து  முன்வைத்த யோசனைகளுக்கு  அன்று தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த ஆட்சியில் மீண்டும் தீர்வுகள் குறித்த நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றோம். இதில் சகலரதும் இணக்கப்பாடு ஏற்படும் நிலையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி தீர்வுக்காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்க தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், 

 எமது ஆட்சியில் மீண்டும் தற்பொழுது அரசியலமைப்புத் தயாரிப்பு  பணிகளில் ஈடுபட்டுள்ளோம். சகல கட்சிகளின் ஆலோசனைகளுக்கு அமைய நிபுணர்களின் வரைபு யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன. இதன் அடிப்படையில் கலந்துரையாடி இணக்கப்பாடொன்றுக்கு நாம் அனைவரும் வருவதே மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்கவுக்கு நாம் செய்யும் கௌரவமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.