(ஆர்.யசி)

பௌத்த தொல்பொருள் சின்னங்களையும் புராதான பிரதேசங்களையும் அழிக்கும் வகையிலும் வடமாகாணசபை செயற்பட்டு வருகின்றது எனவும் சிங்கள பௌத்த தொல்பொருள் சின்னங்களை அழித்து இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் திட்டமிட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது என பொது எதிரணி உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றம் சுமத்தினார். 

எனினும் வடக்கில் பௌத்த தொல்பொருள் சின்னங்களை அழிக்கும் எந்த நடவடிக்கைளும் இடம்பெறவில்லை எனவும் சிங்கள பகுதியிலேயே அதிகளவான பௌத்த தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிறேரோ சபையில் அறிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை  27/2  இல் பொது எதிரணி உறுப்பினர் தினேஷ் குணவர்தன வடக்கில் பௌத்த தொல்பொருள் சினங்களும் புரதான பிரதேசங்களும் அழிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தினார். 

வடக்கில் புரதான தொல்பொருளியல் பிரதேசங்கள்  முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார், வவுனியா , கிளிநொச்சி ஆகிய இடங்களில் பல பௌத்த புரதான இடங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இது சட்டவிரோத செயலாகும். பயங்கரவாத ஆக்கிரமிப்புக்கள் இருந்த  இடமாக இருந்திருக்க முடியும். அதற்காக இவற்றை வேடிக்கை பார்த்து இருக்க முடியாது. 

கிளிநொச்சி கரைச்சி  பிரதேசத்தில் பௌத்த தொல்பொருள்  பிரதேசம் தரைமட்டமாக்கப்பட்டது. இன்று வடமாகாண சபை செயற்பாடுகள் பௌத்த புராதான பிரதேசங்களை அழிக்கும் சூழ்ச்சியில் செயற்பட்டு வருகின்றது.  வடக்கின் பௌத்த புரதான தொல்பொருளியல் பிரதேசங்களை பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன?.  சிங்கள பௌத்த மக்கள் நம்பிக்கையை புறக்கணிக்கும் நடவடிக்கையாகவே  இதனை நாம் பார்க்கின்றோம். இது மீண்டும் சிங்கள தமிழ் மக்கள் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நகர்வாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் தெரிவித்த உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிறேரோ பதில் கூறுகையில், 

கரைச்சியில் இடம்பெற்ற சம்பவம்  புரதான ஆக்கிரமிப்பு அல்ல. முகப்புத்தகத்தில் சிலர் சில கருத்துக்களை  முன்வைத்த, பின்னர் தொல்பொருளியல் திணைக்களம் பரிசோதனை நடத்தியது. இதில் ஒரு சுவர் ஏ- 9 வீதியின் பஸ் தரிப்பிட சந்தியை அண்மித்து அமைக்கப்பட்டுள்ளது. 

இதில் சுவர் தரைமட்டமாக்கப்பட்ட  கற்கள் அதிலேயே கொட்டப்பட்டுள்ளது. பிரதேசத்தில் சில குழிகளை மூடியும் உள்ளனர். அது குறித்த சகல புகைப்படங்களும் உள்ளன. இது அபயகிரிவிகாரை சுவர் என்றே ஆரம்பத்தில் கூறப்பட்டது.  இந்த சுவர்களில் அடையாளங்களை பார்க்கையில் அபயகிரி விகாரையின் புனரமைப்புக்காக அதே போன்ற கற்களை அமைக்க பணிக்கப்பட்டுள்ளமையும் சகல கற்களிலும் இது அடையாளபடுத்தப்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது என்றார்.