(இராஜதுரை ஹஷான்)

 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக பிரதமரின் அரசியல் அதிகாரத்தை பலப்படுத்தி தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காகவே, மக்கள் விடுதலை முன்னணி  பாராளுமன்றத்தில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை தனிநபர் பிரேரணையாக  சமர்ப்பித்துள்ளது என  லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்துச்செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு பல விடயங்களை மறைத்து சூழ்ச்சியான     முறையில் மக்கள்  விடுதலை முன்னணியினர்    சமர்ப்பித்துள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாரிய தோல்வியடையும் என தெரிவித்தார்  .

அவர் மேலும் குறிப்பிடுகையில்

மக்கள் விடுலை முன்னணியினர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20 ஆவது திருத்தம் ஒரு போதும்  மூன்றில் இரண்டு பெரும்பாண்மை ஆதரவினைப் பெறாது. ஏனென்றால் தற்போதைய அரசியல் தேவைகளை பூரணப் படுத்துவதாக அமையாது.தேவையற்ற விடயங்களை மாத்திரமே மக்கள் விடுதலை முன்னணியினர் உள்ளடக்கியுள்ளனர்.

தற்போது 20 ஆவது திருத்தம் வாக்கெடுப்புக்கு வருவதற்கு முன்னரே பல தரப்பினர் தமது எதிரிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதாவது பொதுஜன பெரமுனவின் 54 உறுப்பினர்களும் தேசிய  அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.ஒரு போதும் மக்கள் விடுதலை முன்னணியின் நோக்கங்கள் நிறைவேறாது.