(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) 

மலையக மண்ணில் இலங்கை தொழிலாளர்களின் அர்ப்பணிப்பான சேவையினாலும் போராட்டத்தினாலுமே தற்போது பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் ஏழு முதல் எட்டு வரையில் காணப்படுகின்றது. இன்று ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்து விட்டு இ.தொ.கவை திட்டித்தீர்த்து சுயலாப அரசியலை முன்னெடுக்க முயல்கின்றார்கள். இவ்வாறான சிந்தனையால் பாதாளத்தில் விழவேண்டி ஏற்படும். இதொ.காவை அசைக்க முடியாது எதிர்கால சவால்களையும் முகங் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் திட்டவட்டமாக தெரிவித்தார். 

இன்று வெள்ளிக்கிழமை வேலையாட்களின் தேசிய குறைந்த பட்ச வேதனம் மற்றும் வேலையாட்களின் வரவு செலவுத் திட்ட நிவாரணப் படி சட்ட மூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த தலைவர்களின் செயற்பாடுகளாலேயே இன்று பாராளுமன்றத்தில் ஏழு முதல் எட்டு வரையிலான பிரதிநிதித்துவங்கள் பெறக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. 

கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் நாம் சம்பள உயர்வுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். வெறுமனே மல்லிகைப்பு சந்தி, ஆயிரம் ரூபா சம்பள உயர்வு போன்ற காரணங்களை காட்டி இ.தொ.காவை சாடுகின்றனர். 

அதன் மூலம் சுயலாப அரசியலை மேற்கொள்ள முனைகின்றார்கள். இ.தொ.கா.வை பழி கூறுவதைவிடுத்து மக்கள் அழித்த ஆணையை மதித்து அதற்காக செயற்பட வேண்டும். ஏற்றிவிட்ட ஏணியை தற்போது எட்டி உதைக்கின்றனர். 2500 ரூபா சம்பள அதிகரிப்பு முழுமையாக வழங்கப்பட வேண்டும். 

போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் இ.தொ.கா 1000 ரூபா சம்பள அதிகரிப்பை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் என்பது நிச்சயம். 

அது மட்டுமன்றி எதிர்காலத்தில் ஏற்படப் போகும் சவால்களுக்கும் மக்களுக்கு துணையாக போராடத் தயாராகவே உள்ளது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.